விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அரசு அனுமதியின்றி இயங்கிய 50 மதுக்கூடங்கள் சீல் வைக்கப்பட்டன.
தஞ்சையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் மதுக்கூடங்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டது.
அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள், கலால்துறையினர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், உள்ளூர் போலீஸார் பல்வேறு குழுக்களாகச் சென்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் கடந்த 2 நாள்களாக திடீர் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் 2 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளைம், சேத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பந்தல்குடி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, வீரசோழன், சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிளில் போலீஸார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனைகள் நடத்தினர்.
அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 121 மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அதில், 104 மதுகூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மீதம் உள்ள மதுக்கூடங்கள் செயல்பாடமல் உள்ளதும் தெரியவந்தது.