அகர்தாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா, சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இந்த மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. அதாவது பாஜக 31 தொகுதிகளிலும், டிஎம்பி கட்சி 13 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஐபிஎப்டி கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
திரிபுரா முதல்வராக மாணிக் சாகா பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் திரிபுரா மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ மாஜி தலைவருமான சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது திரிபுரா மாநில சுற்றுலா துறை தூதரகாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முதல்வர் மாணிக் சாகா உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛”திரிபுராவில் சுற்றுலாவை மேம்படுத்த விரும்புகிறோம். திரிபுராவில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. உலகம் முழுவதும் சவுரவ் கங்குலி அறிந்து வைத்துள்ளனர். இதனால் அவர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்” என்றார்.
பொதுவாக மத்திய, மாநில அரசுகள் நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்களை விளம்பர தூதராக பயன்படுத்துவது வழக்கான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக சவுரவ் கங்குலியை அம்மாநில அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கிடையே தான் கங்குலி விரைவில் பாஜகவில் இணைவதாக செய்திகளும் பரவின.
அதாவது மேற்கு வங்க சட்டசபை தேர்தலின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கங்குலியின் வீட்டுக்கு சென்று உணவருந்தி பேசினார். அப்போதே பாஜகவில் கங்குலி இணைவதாக கூறப்பட்டது ஆனால் அவர் மறுத்தார். இந்நிலையில் தான் திரிபுரா தூதராக பாஜக அரசு நியமித்து இருப்பது மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளன. இதுபற்றி கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி கூறுகையில், ‛‛எல்லாமே அரசியலாக மாறுவது ஏன்? அமிதாப் பச்சன் குஜராத்துடனும், ஷாருக்கான் மேற்கு வங்காளத்துடனும், சச்சின் டெண்டுல்கர் கேரளாவுடனும், ரிஷப் பந்த் உத்தரகாண்டுடனும், எம்எஸ் தோனி ஜார்கண்டுடனும் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் ஏன் எல்லாவற்றையும் ஏன் அரசியலாக்க வேண்டும்? இந்த செயல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என வருத்தத்தை தெரிவித்தார். மேலும் தான் பாஜகவில் இணையவில்லை என்பதையும் உறுதி செய்தார்.