2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர் கட்சியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. முக்கியமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் மாற்று கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை கட்டம் கட்டி தூக்கினர்.
செந்தில் பாலாஜி தூக்கி வந்த மாற்றுக் கட்சியினர்அதிமுக, அமமுக என ஒரு ரவுண்டு சென்று வந்த செந்தில்பாலாஜி தனது பழைய நட்பை பயன்படுத்தி முக்கிய தலைகளை திமுகவுக்கு திருப்பினார். செல்வாக்கான நபர்கள் ஒரு சிலர் கட்சிக்குள் வருவதாலோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலோ கட்சி வளர்ந்துவிடுமா? புதிதாக வந்தவர்களால் என்னென்ன ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று விசாரிக்கையில் அதிருப்தி பேச்சுக்களே மிஞ்சுகின்றன.
பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்தருமபுரி மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்த செந்தில் பாலாஜியால் அழைத்து வரப்பட்டவர் பழனியப்பன். அதிமுக அரசில் அமைச்சராக பணியாற்றிய பழனியப்பன் அமமுகவில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அங்கு அதிருப்தியாக இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது. அவருக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவினருக்கு திமுகவில் அங்கீகாரம் இல்லையா?புதிதாக வந்தவர்களுக்கு கட்சியில் பெரிய பதவிகள் கொடுத்து ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை, அங்கீகாரம் இல்லை என்ற பேச்சு தருமபுரி மாவட்ட திமுகவுக்குள் அடிபடுகிறது. “2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் பழனியப்பன். பாமக சார்பில் போட்டியிட்டார் சத்திய மூர்த்தி. திமுக சார்பில் பிரபு ராஜசேகர் போட்டியிட்டார். திமுகவுக்கு எதிராக போட்டியிட்ட இருவரும் கட்சியில் முக்கிய பதவிகளை அலங்கரிக்க திமுக சார்பில் போட்டியிட்ட பிரபு ராஜசேகர் கட்சியில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் தான் உள்ளார்.
அதிருப்தியில் திமுக தொண்டர்கள்பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி, பாமகவிலிருந்து வந்த சத்தியமூர்த்திக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சிக்காக ஆரம்பம் முதல் உழைத்தவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. புதிதாய் வந்தவர்கள் தங்களை வளர்த்துக் கொள்கிறார்களே தவிர கட்சியை வளர்க்கவில்லை. டெண்டர்களைக் கூட தங்களுக்கு வேண்டிய அதிமுகவினருக்கு கொடுக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
பழனியப்பன் மீது புகார்!கட்சிக்காரர்களை புறக்கணித்துவிட்டு மாற்றுகட்சியினருக்கு சலுகை காட்டுவது நியாயமா என்று கேட்டால், இதை கொடுத்து தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும் என்று சமாளிக்கும் வேலைதான் நடக்கிறது. அதேசமயம் கட்சியில் மற்றவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்று முக்கிய பதவிகளை தங்களது ஆதரவாளர்களைக் கொண்டே நிரப்பும் வேலையும் நடைபெறுவதாக சொல்கிறார்கள்” என்கிறார்கள்.
பழனியப்பன் தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு?பழனியப்பனுக்கு எவ்வளவு செல்வாக்கு என்று பார்க்க வேண்டும் 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 75 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிலும் அமமுகவுக்கான பிரத்யேக வாக்குகளை கழித்துவிட்டால் பழனியப்பனின் தனிப்பட்ட செல்வாக்கு முலம் கிடைத்த வாக்குகள் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
ஸ்டாலின் சறுக்கிய இடம் இதுதான்!தொண்டர்கள் தான் முக்கியம், அவர்களது குறைகளை கேளுங்கள், வேண்டியதை செய்து கொடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட இது குறித்துப் பேசியிருந்தார். ஆனால் புதிதாய் வந்தவர்களுக்கு கட்சியில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் வரை அசல் திமுகவினர் பாதிக்கப்படுவதை தடுக்கமுடியாது என்கிறார்கள்.