லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களை போல டிசி படங்களுக்கும் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
பேட்மேன், வொண்டர் உமன், ஆக்வாமேன், ஜோக்கர், சமீபத்தில் வந்த பிளாக் ஆடம் வரை டிசியின் மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்கள் தான்.
இந்நிலையில், இதில் அதிக சம்பளத்தை வாங்கும் டாப் 5 டிசி ஹீரோக்கள் யார் யாரென்கிற பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..
5வது இடத்தில் பேட்மேன் நடிகர்: டிசி படங்களில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பென் அஃப்லெக் அதிகமாக சம்பளம் வாங்கும் டிசி நடிகர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
Batman v Superman: Dawn of Justice படத்தில் பேட்மேனாக நடித்து மிரட்டிய பென் அஃப்லெக் விரைவில் வெளியாக உள்ள ஃபிளாஷ் படத்திலும் பேட்மேனாக அதிரடி காட்ட உள்ளார். இவருக்கு அதிகபட்சமாக 12.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 103 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
4வது இடத்தில் வில் ஸ்மித்: ஆஸ்கர் விருது வென்ற கிங் ரிச்சர்ட் படத்திற்கு 42 மில்லியன் டாலர் அதாவது 347 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய வில் ஸ்மித்துக்கு டிசி நிறுவனம் வெறும் 13 மில்லியனைத் தான் அதாவது 107 கோடி ரூபாயைத் தான் சம்பளமாக அதிகபட்சமாக கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
டிசி யூனிவர்ஸில் உருவான சூசைட் ஸ்குவாட் படத்தில் டெட்ஷாட் எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் வில் ஸ்மித். ஆஸ்கர் அறைக்கு பிறகு இவருக்கு கணிசமாக பல பட வாய்ப்புகள் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஜானி டெப் போல வெயிட்டான கம்பேக் கொடுப்பார் என்பது கன்ஃபார்ம்.
3வது இடத்தில் ஜேசன் மோமோவா: கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் காட்டுவாசி தலைவனாக நடித்து கலக்கிய ஜேசன் மோமோவாவை அவரது ஹைட்டு வெயிட்டை பார்த்து அப்படியே டிசி நிறுவனம் விட்டால் இவரை மார்வெல் நிறுவனம் தோருக்கு அண்ணனாக மாற்றிவிடும் என நினைத்து ஆக்வாமேனாக அண்டர்வாட்டரில் அடக்கியது.
ஆனால், 2018ல் வெளியான அந்த படம் டிசியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு 1 பில்லியன் டாலர் வசூலை ஈட்டி கெத்துக் காட்டியது. ஆக்வாமேன் படத்துக்கு வெறும் 4 மில்லியன் டாலர் அதாவது 33 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய ஜேசன் மோமோவா ஃபாஸ்ட் எக்ஸ் படத்தின் வில்லனே நான் தான் தெரியுமா என டிசியிடம் பேரம் பேச அடுத்த படத்திற்கு அதிரடியாக இவரது சம்பளத்தை 15 மில்லியன் டாலராக அதாவது 124 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளது என்கின்றனர்.
2வது இடத்தில் ஜோக்கர் நடிகர்: மார்வெலிடம் பலமாக அடிவாங்கி வந்த டிசி நிறுவனத்தை தனது வில்லத்தனத்தாலே ஜோக்கர் படத்தின் மூலம் டாப்புக்கு கொண்டு சென்றவர் நடிகர் ஜோவாகின் பீனிக்ஸ் அவர் தான் டிசியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 2வது இடத்தில் உள்ளாராம்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்துக்கு வென்ற ஜோவாகின் பீனிக்ஸுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் டாலர் அதாவது 165 கோடி ரூபாய் சம்பளமாக ஜோக்கர் சீக்வெல் படத்திற்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நம்பர் ஒன் இடத்தில் தி ராக்: கடைசியாதான் டிசிக்குள்ள அவரு வந்தாரு, ஆனால், ஒரே படத்திலேயே வேறலெவல் ரீச் அடைந்து டிசி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தரமான சம்பளத்தை வாங்கி நம்பர் ஒன் இடத்தை இந்த பட்டியலில் டுவைன் தி ராக் ஜான்சன் பிடித்துள்ளார்.
பிளாக் ஆடம் படத்தில் நடித்த டுவைன் ஜான்சனுக்கு அதிகபட்சமாக 186 கோடி ரூபாய் சம்பளம் அந்த படத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசி நிறுவனத்தை தாண்டி மற்ற நிறுவனங்களில் ராக் நடிக்கும் படங்களுக்கு 300 கோடி முதல் 400 கோடி வரை வாங்குகிறார் என்றும் ஹாலிவுட்டில் இப்போதைக்கு அவர் தான் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்றும் கூறுகின்றனர்.
டிசி நிறுவனம் ஹீரோக்களுக்கான சம்பளத்தை குறைத்து விட்டு படத்தின் தொழில்நுட்பத்திற்காகவும் மேக்கிங்கிற்காகவும் அதிக பணத்தை செலவிடுவதாக சொல்கின்றனர்.