அம்பானிக்கு நிகராக கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தவர் தொழிலதிபர் அதானி. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் என பலவிதமான தொழில்களில் அதானி குழும் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஆன கவுதம் அதானி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அந்த மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்ட கவுதம் அதானி மெல்ல உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறந்தார். பல்வேறு வழக்குகள், விமர்சனங்கள் எல்லாம் கடந்து அதானி குழுமம் வளர்ச்சி கண்டது. ஆனால் கடந்த ஜனவரியில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட பங்கு மோசடி, பண மோசடி புகார்கள் குறித்த அறிக்கை அதானி கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தை சில நாட்களிலேயே ஆட்டம் காண வைத்தது.
போலி நிறுவனங்கள் மூலமாக முதலீடுகளை மேற்கொண்டு பங்கு விலைகளைச் செயற்கையாக விலையேற்றி வங்கிகளிடமிருந்து கடன்களை அதிகமாக வாங்கியதாக அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.
ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கை வெளியாகிய சில நாள்களிலேயே அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. சில வாரங்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்தது. பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்ததால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தவர் படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு 30-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன் 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, ஹின்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட சரிவால் 40 பில்லியன் டாலராக சரிந்தது.
இதற்கிடையில் அதானி குழுமம் மீதான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. செபி ஒருபக்கம் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் நியமித்த ஏ.எம்.சப்ரே தலைமையிலான நிபுணர் குழுவும் விசாரணை நடத்தியது. செபிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், அதுவரையிலான விசாரணையில் எந்தவிதமான முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், மேலும் ஆறு மாதம் கால அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தது.
ஆனால் ஆகஸ்ட் 14 -ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் ஏதுமில்லை எனத் தெரிவித்திருக்கிறது.
நிபுணர் குழுவின் இந்த அறிக்கை அதானி குழுமத்துக்குச் சாதகமாக அமைந்ததால் அதன் நிறுவனப் பங்குகள் மளமளவென ஏற்றம் கண்டன. 5 வர்த்தக தினங்களில் பார்க்கும்போது அதானி எண்டர்பிரைசஸ் 33.83%, அதானி போர்ட்ஸ் 8.87%, அதானி பவர் 19.21%, அதானி டிரான்ஸ்மிஷன் 23.51%, அதானி கிரீன் எனர்ஜி 16.96%, அதானி டோட்டல் கேஸ் 25.67%. அதானி வில்மர் 21.02%, ஏசிசி லிமிடெட் 3.19%, அம்புஜா சிமெண்ட்ஸ் 4.84%, என்டிடிவி 24.28% என உயர்வைச் சந்தித்துள்ளன.
இவ்வாறு அதானி குழுமப் பங்குகள் விலை உயர்வைச் சந்தித்ததால் ஒட்டுமொத்தமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது. இதன் பலனாக கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் உயர்ந்தது. அதன்படி ப்ளூம்பெர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 63 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தற்போது 18 வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி கிட்டதட்ட 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13-ம் இடத்தில் உள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டவர் தற்போது 20 இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார். தொடர்ந்து அதானி குழுமப் பங்குகள் ஏற்றம் காணும் பட்சத்தில் விரைவில் மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.