அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது.
அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) கலாநிதி எஸ்.ஆதிரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் இடம்பெற்றது.
இதேவேளை இன்று (26) சௌமியபவனிலும், இ.தொ.கா.வின் பிரதேச காரியாலயங்களிலும் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை (29) அமரர்.ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக முத்திரை வெளியீடு இடம்பெறவுள்ளதோடு, அன்றைய தினம் கொட்டகலையிலும் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது