2001 ஆம் ஆண்டு வெளியான `தில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
இப்படத்திற்கு பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் `Ashish Vidyarthi actor vlogs’ என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். சமூக வலைதளங்கள் முழுவதும் இவர்களது திருமண புகைப்படங்களும், செய்திகளும்தான் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்நிலையில் அவரது முதல் மனைவி ராஜோஷி பருவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “ ஒரு சரியான நபர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்க மாட்டார். அதேபோல் உங்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொள்ள மாட்டார். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.


அதேபோல் அவர் பதிவிட்ட மற்றொரு பதிவில், “அதிக சிந்தனையும் சந்தேகமும் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும். அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும். நீண்ட காலமாக நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள், உங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இது, நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்” என்று பதிவிட்டிருக்கிறார்.