தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இன்று காலை முதல் அவருடைய சகோதரர் அசோக் உட்பட செந்தில் பாலாஜி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலத்திலும் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான செம்மலையிடம் பேசினோம். நம்மிடம் பேசியவர், “அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சர்களைவிடவும் முதலமைச்சரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. அவரிடம் இருக்கும் இரண்டு துறைகளும் பசை உள்ள துறைகள். அதில், டாஸ்மாக் துறையைப் பொறுத்தவரை பொதுவெளியில் பரவலாகப் பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதில் குறிப்பாக அனுமதி பெற்ற மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு போலி மதுபான பாட்டில்கள் டாஸ்மாக் கடையில் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அனுமதி பெற்ற பார்கள், அனுமதி பெறாத பார்கள் என 24 மணி நேரமும், போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
சட்டத்துக்குப் புறம்பான விற்பனைகளுக்கு கணக்கு வழக்கு எதுவும் இல்லை என்கிறார்கள். அதைவிட டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் புலம்புவது மாதா மாதம் கடை ஒன்றுக்கு 60,000 ரூபாய் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்… சென்னை பவுன்சர்களை வைத்துக் கட்டாய வசூல் வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்த புகார்கள் இந்தத் துறையிலிருந்து வருவதால், துறை அமைச்சருக்கு மட்டுமல்ல முதலமைச்சருக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் இருந்து வருகிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என்று கொள்கை முடிவின்படி, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் 500 கடைகள் மூடப்பட்டன. பின்னர் எடப்பாடியாரின் ஆட்சிக்காலத்திலும் 500 கடைகள் மூடப்பட்டன.
ஆனால், தி.மு.க ஆட்சிக்காலத்தில் 500 கடைகள் மூடப்படும் என்று சொன்னார்களே தவிர, இன்னும் மூடியதாகத் தெரியவில்லை. மிகவும் தத்ரூபமாக விற்பனையாகாத டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கணக்கெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆக தி.மு.க ஆட்சியில் மதுவிலக்கு கொள்கை தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. எது எப்படியோ ‘உப்பை தின்னவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.’ இந்த வருமான வரித்துறை சோதனையை என்னுடைய பார்வையில், சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்றுதான் கருதுகிறேன்” என்றார்.