சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா டேம் உள்ளது. இந்த டேமில் உள்ள 13 அடி ஆழ தண்ணீர் ஆனது சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இங்கு வந்து தான் நீர் அருந்தும். கடுமையான கோடையிலும் அங்கு 10 அடியில் நீர் இருக்கும். இந்தநிலையில் அம்மாநிலத்தின் உணவுத்துறை அதிகாரி ராஜேஸ் விஸ்வாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் வார இறுதிநாள் பொழுதுபோக்கிற்காக அந்த டேமிற்கு சென்றுள்ளார்.
டேமில் குளித்துவிட்டு தனது நண்பர்களுடன் அந்த உணவுத்துறை அதிகாரி தனது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக போன் தண்ணீருக்குள் விழுந்துள்ளது. விலை உயர்ந்த போன் என்பதால் வாயிலும், வயித்திலும் அடித்துக் கொண்ட அதிகாரி என்ன செய்வது என தெரியாமல் யோசித்துள்ளார். அப்போது உதிர்த்த ஐடியாவில் தான் தற்போது அந்த ராஜேஸ் விஸ்வாஸ் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்.
போன் தண்ணீருக்குள் சென்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத அதிகாரி, இந்த சொல்லொண்ணாத துயரத்தை அருகில் இருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாரியின் மனக் கஷ்டத்தை புரிந்து கொண்ட நீச்சல் தெரிந்தவர்கள் டைவ் அடித்து செல்போனை தேடியுள்ளனர். எவ்வளவு தான் முங்கி முங்கி சென்றாலும் போன் கிடைத்தபாடில்லை.
அதையடுத்து அந்த அதிகாரி 30 குதிரை திறன் கொண்ட இரண்டு மோட்டார்களை பயன்படுத்தி, அந்த டேமில் உள்ள தண்ணீரை வெளியேற்றி உள்ளார். அதாவது கடந்த திங்கள் கிழமை மாலை ஆரம்பித்த தண்ணீர் வெளியேற்றம் நேற்று வரை நடைபெற்றுள்ளது. சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி விட்டு அதாவது 15 அடியில் இருந்த தண்ணீரை மூன்று நாட்களாக வெளியேற்றி 5 அடிக்கு கொண்டு வந்து தனது செல்போனை கண்டுபிடித்தார். 3 நாட்களாக நீரில் ஊறியதால் போன் வேலை செய்யாததால் அதிகாரி மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்தநிலையில் தண்ணீர் வெளியேற்று விஷயம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்து அங்கு வந்து, அந்த ராஜேஷ் விஸ்வாசை கடுமையாக சாடினர். அதிகாரிகளின் உத்தரவுடன் தான் இதை செய்தேன் என அவர் கூறியதுதான் தாமதம், போலீஸ் வழக்கு பதிவானது. சத்தீஸ்கரில்
காங்கிரஸ்
ஆட்சி நடப்பதால் அரசியல் செய்யும் வாய்ப்பாக கருதி, இந்த செயல்பாட்டை கடுமையாக பாஜக சாடியுள்ளது. பாஜகவின் முன்னாள் முதல்வர் ராமன் சிங், இந்த பகுதியை காங்கிரஸ் தங்களின் முன்னோர்களின் சொத்தாக பார்க்கிறது. சத்தீஸ்கரின் சர்வாதிகாரம் நடைபெறுகிறது என கடுமையாக சாடினார்.