கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!!

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். சுரேஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராம்சரந்தேஜ் லபானி மேற்கொண்டிருக்கிறார்.‌ படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைக்கும் பணியினை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா கையாண்டிருக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘கே. ஜி. எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிக்கும் ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.‌

மேலும் இது தொடர்பாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில், ” ரகு தாத்தா – தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது. கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கடுமையான கலகக்கார இளம் பெண்ணின் கதை இது” என குறிப்பிடுகிறார்.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்- ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நற்பெயரை சம்பாதித்திருக்கிறது. இதனை அவர்களின் சமீபத்திய வெற்றிகளான ‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ ஆகிய படங்களின் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து எல்லைகளைக் கடந்த.. அனைத்து தரப்பு பார்வையாளர்களுடன் அணுக்கமான தொடர்பு கொள்ளும் வகையிலும், சிந்தனைகளை தூண்டும் வகையிலும் கதைகளை வழங்கி வருகிறார்கள்.

‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால், தற்போது பின்னணி மற்றும் இறுதி கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து படங்களை வெளியிடவிருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சலார்’ திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகிறது. ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ‘தூமம்’ எனும் மலையாளத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இதை தவிர்த்து இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டு பிராந்திய அளவிலான படைப்புகளை வெளியிடுவதற்கான திட்டமும் இருக்கிறது.

‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், தொடர்ந்து புதுமையான படைப்புகளை தேர்வு செய்து ரசிகர்களுக்கு தனித்துவமிக்க… இணையற்ற… சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படமும் தனித்துவமான கதை களத்துடன் ரசிகர்களை விரைவில் சந்திக்கவிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.