கும்பகோணம் : அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் குளத்தில், சட்ட விரோதமாக மீன் பண்ணை நடத்த தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐவர்பாடி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், “200 ஆண்டு பழமையான அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயிலை தனியார் கோயில் என 2002-ம் ஆண்டில் இந்துசமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இதனை மறு ஆய்வு செய்ய இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் விசாரணை தொடங்கியுள்ள இந்த நிலையில், தந்தன் தோட்டம் பஞ்சாயத்து தலைவர் எந்தவித உரிமமும், அனுமதியும் இல்லாமல், அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் மீன் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
கோயில் குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த கோயில் குளத்தில் தந்தன் தோட்டம் பஞ்சாயத்து தலைவருக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் மஞ்சுளா, “கோயில் குளத்தின் நீர் பூஜைக்கு பயன்படுத்துகிறது. அப்படியான குளத்தில் விற்பனைக்காக மீன் வளர்ப்பதை ஏற்க முடியாது.
எனவே, கோயில் குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்த தடை விதிப்பதுடன், அந்தக் குளத்தின் விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவர் தலையிடக் கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.