புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்க டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘மோடி’ பெயர் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வயநாடு எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து எம்.பிக்கான சலுகைகளையும் இழந்தார். இதன்படி, அவர் பயன்படுத்தி வந்த அதிகாரபூர்வ பாஸ்போர்ட்டை ராகுல் காந்தி திரும்ப ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில், சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி, டெல்லி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கினை வெள்ளிக்கிழமை விசாரித்த டெல்லி நீதிமன்றம் நீதிபதி, “உங்களது கோரிக்கையில் ஒரு பகுதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இல்லை, 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
இதனிடையில், ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் பெற அனுமதி வழங்கக் கூடாது என்று முன்னாள் பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
2012-ம் ஆண்டு அப்போது ஜனதா தளக் கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணிய சுவாமி டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் சோனிய காந்தி, ராகுல் காந்தி உள்பட 6 பேர் மீது பொது நிறுவனத்தைக் கைப்பற்றியதாகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியிடும் அசோசியட் ஜார்னல்ஸ் லிமிடேட் நிறுவனத்தின் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்துவிட்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வழக்கினை தற்போது நீதிமன்ற உத்தரவின் பெயரில் அமலாகக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி ஒருவார காலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அங்கு அவர் ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில் நடைபெற இருக்கும் பொதுப் பேரணி ஒன்றில் பங்கேற்று பேச இருக்கிறார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கும் ராகுல், அதன் ஒரு பகுதியாக பேரணியில் பங்கேற்க இருக்கிறார். இது அமெரிக்காவில் அவர் பங்கேற்க இருக்கும் முதல் பொதுப் பேரணி என்பது குறிப்பிடத்தக்கது.