கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை உடைக்கவே ரெய்டு நடத்தப்பட்டதாக விசிக தெரிவித்துள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போதும் லைம் லைட்டில் இருந்து வருகிறார். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய பின்னர் அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி வாகை சூடினார்.
அதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்
விற்கு செல்வாக்கு குறைவாகவே இருந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக படுதோல்வியை சந்தித்தாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கொங்கு பெல்ட் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் தான், அந்த மண்டலத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை திமுக நியமித்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள், இடைத் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியது. குறிப்பாக அதிமுகவும், பாஜகவும் ஆதிக்கம் செலுத்தும் கோயம்பத்தூரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எண்ணிப்பார்க்காத வகையில் திமுக வென்றது. கொங்கு மண்டல திமுக வெற்றியின் காரணகர்த்தாவாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கை காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜியை ஓரம்கட்ட பாஜகவும், அதிமுகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சியில் அண்ணாமலை தோல்வி அடைய செந்தில் பாலாஜி காரணம் என அவர் நினைப்பதாக திமுகவினர் கருதுகின்றனர். அதனால் அவரை குறிவைத்தே அண்ணாமலை தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் என்கின்றனர் அவர்கள்.
இந்தநிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், சகோதரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்தே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. இது பாஜக – அதிமுகவின் கூட்டுச்சதியாகும்.
கொங்கு மண்டலத்தில் திமுகவை வலிமையாக மாற்றியதில் பெரும் பங்கு செந்தில் பாலாஜி அவர்களுக்கே உண்டு. அதுமட்டுமல்லாது, நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளில் பாஜகவும் அதிமுகவும் படுதோல்வியை சந்தித்ததற்கும் அமைச்சரே காரணம். இச்சூழலில், 2024 நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் குறைந்தளவாவது வெற்றி பெற வேண்டுமானால், செந்தில் பாலாஜியை வீழ்த்தினால் தான் முடியும் என்பதால் இப்போதே அதற்கான வியூகத்தை எடுத்துள்ளது அண்ணாமலை தலைமையிலான பாஜக கும்பல்.
அதற்கு அடி பணிந்து சேவகம் செய்துள்ளது வருமான வரித்துறையினர். சனநாயக அமைப்புகளை ஒவ்வொன்றாக பாஜகவின் கிளை அமைப்புகளாக மாற்றுவது, சனநாயகத்துக்கு நல்லதல்ல.
மாநில உரிமைகளுக்கும் நல்லதல்ல!’’ என தெரிவித்துள்ளார்.