தமிழகத்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், ஜூன் 5-ம் தேதியில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகள் திறக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளி பேருந்துகள் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் சைக்கிள், லேப்டாப் வழங்கவும், பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைக்க கோரி, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழ் கட்டாய பாடம்” என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்து கண்காணிக்கவும் அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.
பள்ளிகள் திறப்பு தேதி நாளை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.