சென்னை: திட்டக்குடி அருகே கல்லூர் ஊராட்சியில் கான்கிரீட்டில் அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்காலில் மின்கம்பத்தை நட்ட மின்வாரியத்தினரால் ஏற்பட்ட சர்ச்சைக் காரணமாக மாவட்ட ஆட்சியரின் தலையீட்டுக்குப் பின் மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கல்லூர் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 15 தினங்களாக நடைபெற்று வருகிறது. அப்போது மங்களூர் துணை மின்நிலைய மின்வாரியத்தினர், வடிகால் வாய்க்கால் அருகே மின் கம்பம் நடவேண்டும் என்பதால், அங்கு இடைவெளிவிட்டு வடிகால் அமைக்கும்படி கூறியுள்ளனர்.
அதன்படி வாய்க்கால் அமைக்கும் ஒப்பந்ததாரர், பணி செய்யும்போது, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் வாய்க்காலை பகுதியில் இடைவெளி விட எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒப்பந்ததாரர் வாய்க்கால் அமைத்து சென்றுவிட்டார்.
இதையடுத்து மின்வாரியத்தினர் மின்கம்பம் அமைக்க வந்தபோது, குடியிருப்பை ஒட்டி மின்கம்பம் அமைக்க முடிவுசெய்தபோது, குடியிருப்புவாசிகள் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி, வாய்க்காலிலேயே மின்கம்பத்தை நட்டுச் சென்றுள்ளனர் மின்வாரிய ஊழியர்கள். இந்த நிலையில் மின்கம்பத்தை அகற்றாமல் வடிகால் வாய்க்கால் அமைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, கடலூர் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர், இது தொடர்பாக மங்களூர் வட்டார் வளர்ச்சி அலுவலரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் , மங்களூர் துணை மின்நிலைய உதவிப் பொறியாளரிடம் முறையிட்டதையடுத்து, மின்வாரியத்தினர் மின்கம்பத்தை அகற்றி, குடியிருப்பு அருகே மின் கம்பத்தை நட்டுச் சென்றனர்.