திமுக கூட்டணி கட்சி: பெண் என்றும் பாராமல்.. நாகை சம்பவம்.. கடும் நடவடிக்கை தேவை.!

நாகை ஹிஜாப் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பாஜக கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியமைத்தது முதலே சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு, பசு காவலர்கள் தாக்குதல், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, மசூதிகளில் தொழுகை மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு என சிறுபான்மையினர் மீதான வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட நேரடியான சிறுபான்மையின வெறுப்பு பிரச்சார படங்கள் வெளியிடப்பட்டதையும் ஜனநாயகவாதிகள் கண்டித்தனர். அதேபோல் கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பல மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஹிஜாப் பிரச்சனை வெடித்தது. தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிந்து கொண்டு இருக்கும் பெண்கள் இழிவு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அதேபோன்றதொரு சம்பவத்தை மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால், பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.

எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.