கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கான்வாய் வாகனங்கள் மீது ஜார்கிராம் மாவட்டத்தில் இன்று போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மேற்கு வங்காள மந்திரி பிர்பாஹா ஹன்ஸ்தாவின் கார் சேதமானது.
குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம், குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓபிசி பிரிவில் வகைப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கக்கோரி தக்சின் தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மெதினிபூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று அபிஷேக் பானர்ஜியின் தலைமையில் ஜார்கிராமில் ‘நவ் ஜோவர்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிர்பாஹா ஹன்ஸ்தா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அபிஷேக் பானர்ஜியின் கான்வாய் லோதாஷூலி வழியாக ஷல்பானிக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் நெடுஞ்சாலை 5-ல் இருபுறமும் குர்மி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அபிஷேக் பானர்ஜியின் கான்வாய் அந்த பகுதியைக் கடந்தபோது போராட்டக்காரர்கள் கான்வாய் வாகனங்கள் மீது செங்கற்களை வீசினர். இந்த தாக்குதலில் கான்வாய் முடிவில் இருந்த பிர்பாஹா ஹன்ஸ்தாவின் காரின் கண்ணாடி சேதமடைந்தது.
தாக்குதலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிர்பாஹா ஹன்ஸ்தா, “நானும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவன். நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இந்த நடவடிக்கை முரட்டுத்தனமானது. இதன் முடிவை நான் பார்ப்பேன்” என்று கூறினார்.