• வரி மேன்முறையீட்டுக்கு விசேட நீதிமன்ற முறைமை
அரசாங்கத்துக்கு அறவிடப்பட வேண்டிய சுமார் 950 பில்லியன் ரூபாய் தொகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு இல்லாத சுமார் 270 பில்லியன் ரூபாய் தொகையை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமை குறித்து தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (23) இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தடுத்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியன இணைந்து தேசிய பொருளாதாரத்துக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கும் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல்வேறு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தி அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அரசுக்கு வருமானம் பெற்றுக்கொடுக்கும் பாரிய நிறுவனமான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு இந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே கேள்வியெழுப்பினார்.
அதற்கமைய, மேன்முறையீடு செய்வதற்காகக் காணப்படும் ஏற்பாடு காரணமாக வரி செலுத்துபவர்கள் அதனைத் தவறாகப் பயன்படுத்தி வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதாகவும் அவ்வாறு மேற்கொள்ளப்படும் மேன்முறையீட்டு சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெறுவதற்கு சுமார் 2 – 7 வருடங்கள் வரை நீடிப்பதாகவும் இதற்கான சட்ட மறுசீரமைப்புகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.
சட்ட ரீதியாகக் காணப்படும் மேன்முறையீட்டு ஏற்பாடு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் எடுப்பதாகவும், இது திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்றப்பட்டது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏனைய நாடுகளில் காணப்படுவது போன்ற வரி தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கான பிரத்தியேகமான நீதிமன்ற அமைப்பு இருந்தால் இந்த சட்ட நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய முடியும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரஞ்சித் ஹபுஆரச்சி சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, இது தொடர்பில் நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து வரி மேன்முறையீட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு பிரத்தியேக நீதிமன்ற அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுமார் 500,000 வரி கோப்புகளில், வரி செலுத்தக்கூடிய கோப்புகளின் எண்ணிக்கை தொடர்பில் இதன்போது குழு வினவியது. எனினும் அது தொடர்பான தகவல்கள் இல்லாமை காரணமாக குழு அதிருப்தியை வெளியிட்டதுடன், குழுவின் அடுத்த கூட்டத்தில் அவற்றை வழங்குமாறு குழு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும், வரி செலுத்தாத பேரளவில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எனினும் இவை தொடர்பான சரியான தகவல்கள் திணைக்களத்திடம் இல்லை என்பது இதன்போது புலப்பட்டது. இதேவேளை, இந்நாட்டில் நடைபெறும் பாரிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தரவுகள் பெற்றுக்கொள்வதற்கான சரியான முறைமை இன்மை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. எனவே, இவற்பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பொறிமுறையை தயாரிக்குமாறும் அதற்கான சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதரவை குழுவின் ஊடாக செய்து தருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து வரி அறவிடுதல், புதிய வரி கோப்புகளை ஆரம்பித்தல், திணைக்களத்தில் காணப்படும் ஊழியர் வெற்றிடம், பிரதேச செயலகங்களில் உள்ள வரி அதிகாரிகளின் விடயங்கள், RAMIS முறைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தடுத்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ விமல் வீரவன்ச, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ வீரசுமன வீரசிங்க, மற்றும் கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.