நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஹிஜாப் அணிந்திருந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராமை காவல் துறையின் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 25-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஷ்வர் ராம் சுப்பிரமணியை அழைத்துக்கொண்டு திருப்பூண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஜன்னத் மற்றும் செவிலியர், சுப்ரமணியை பரிசோதித்துவிட்டு, அவரை உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராம், பணியிலிருந்த பெண் மருத்துவரை ஜன்னத்திடம், நீங்கள் மருத்துவரா? ஹிஜாப் ஏன் அணிந்திருக்கிறீர்கள்? டூட்டியில்தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டபடி, பெண் மருத்துவரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பெண் மருத்துவர் ஜன்னத்தும், பாஜக நிர்வாகி கேள்வி கேட்பதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இது விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெண் மருத்துவருக்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சங்கங்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து, பணியிலிருந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த புவனேஷ்வர் ராமை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். புவனேஷ்வர் ராம் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸார், புவனேஷ்வர் ராமை கைது செய்துள்ளனர்.
சுப்பிரமணி மறைவு…. இதனிடையே புவனேஷ்வர் ராமால் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணி உயிரிழந்தார். இதையடுத்து, பெண் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்ட பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
An office bearer of a certain party(u know which), threatening a Muslim lady doctor on Night Duty, at Thirupoondi hospital, Nagapattinam district, for wearing a Hijab while on duty, last night. Tamilnadu is a secular state with a secular, just govt. Strict action should be taken. pic.twitter.com/CJPguqr3OZ
— Dr Jaison Philip. M.S., MCh (@Jasonphilip8) May 26, 2023