புதுடெல்லி,
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், அங்குள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-
“புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். இதில் சர்ச்சையை உருவாக்கக் கூடாது. ஆனால் இது சர்ச்சை ஆக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. சிலர் இதை சர்ச்சைக்குரியதாக ஆக்க முயல்கிறார்கள்.
அரசியல் செய்வதற்கு ஓர் எல்லை இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்த நாடும் இணைந்து இதனை திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.