தமிழ்நாட்டு அரசுக்கு திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி இணைப்புப் பாலம் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்கிறது. தமிழர் அறத்திற்கு எதிரான – தமிழர் விரோத – இந்துத்துவ பயங்கரவாத ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்ற பிறகே, தமிழருக்கு அறநூல் தந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியும் என்கின்ற இந்த திட்டம், காவி சாயம் பூசி திருவள்ளுவரை அபகரிக்க முயலும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு துணைபோகக் கூடியதாக அமையும். ஆகவே, இந்த திட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
இரு பாறைகளிடையே சுமார் ரூ.37 கோடி பொருட்செலவில் கண்ணாடியால் ஆன இணைப்புப் பாலம் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைக்கின்றார். திருவள்ளுவர் சிலைக்கு தடைபடும் படகு போக்குவரத்துக்கு மாற்றாக இணைப்புப் பாலம் திட்டம் என கூறப்பட்டாலும், இது விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று அதன் பின்பு திருவள்ளுவர் சிலைக்கு பாலத்தின் வழியாக செல்லக்கூடிய வகையில் உள்ளது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல விரும்புபவர்கள் விவேகானந்தர் பாறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகிறது. இவை ஆர்எஸ்எஸ் விரும்பும் இந்துத்துவ கருத்தாக்கப் பரவலை அதிகரிக்கவே செய்யும்.
இந்துத்துவ பயங்கரவாத பிரச்சார மையமாக விளங்கும் – ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள விவேகானந்தா கேந்திரம் என்னும் ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு, தமிழ்நாடு அரசு படகு போக்குவரத்து அளிப்பதும், சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதும் அரசுக்கு தேவையற்ற வேலை. இந்த விவேகானந்தா கேந்திரம் நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அதிகளவில் நிதியை பெற்றுத் தருகிறது. அதனை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் இணைப்புப் பாலம் அமையும். இந்த திட்டத்தின் மூலம் பலனடையப் போவது தமிழ்நாட்டிற்கு எதிரான ஆர்எஸ்எஸ்-பாஜக மட்டுமே.
ஆகவே, இரு பாறைகளுக்கு இடையிலான இணைப்புப் பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாறாக, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளச் சின்னமாக விளங்கும் திருவள்ளுவர் சிலைக்கு, தனித்துவமான வகையில் கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்க வேண்டும். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது எப்படி தமிழ்நாட்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதோ, அதே போல், திருவள்ளுவர் சிலைக்கு கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பானதாக அமையும்.
அறம் பேசும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இந்துத்துவமயமாக்கும் ஆர்எஸ்எஸ் முயற்சியை தடுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது. ஆர்எஸ்எஸ் முயற்சிக்கு வலுவூட்டக்கூடிய இணைப்புப் பாலம் திட்டத்தை கைவிடுவதும், பார் போற்றும் வகையில், தமிழின் சிறப்பை கொண்டுசெல்லும் வகையில் திருவள்ளுவர் சிலைக்கு தனி பாலம் அமைப்பதும் அவசியமானது என்பதனை உணர்ந்து திமுக அரசு துரிதமாக செயல்பட வேண்டும்’’ என மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.