தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயிலால் பகல் நேங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.
கூடவே அனல்காற்றும் வீசி வருவதால் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்கள் வாகன ஓட்டுநர்களும் அவதி அடைந்து வந்தனர். பகல் நேரங்களில் வெளுக்கும் வெயிலால் இரவு நேரங்களிலும் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தது சற்று இதமளித்தது.
இந்நிலையில் இன்றுடன் நாடு முழுவதும் நிலவி வரும் வெப்ப அலை நிறைவு பெறுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இனி மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யும் என தமிழ் நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் வட தமிழகத்தில் கடுமையான வெயிலுக்கு பிறகு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக மேற்கு சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர் – தாம்பரம் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவத்துள்ளார். தமிழ் நாடு வெதர்மேனின் இந்த தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் மாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது.