புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.”பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜனநாயக விரோதமான அரசியலமைப்புக்கு எதிரான அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக் கோரியும், தற்போதுள்ள ஜனநாயகத்துக்கு எதிரான அரசியல் போக்கு குறித்து விவாதிக்கவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை சந்திக்க இன்று காலை நேரம் கேட்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் காங்கிரஸ் நோக்கிய இந்த நகர்வு நிகழ்ந்திருக்கிறது.
முன்னதாக, டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநருக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, டெல்லி அரசின் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே இருக்கும்படியாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது.
இந்த அவசரச் சட்டத்தை கருப்புச் சட்டம் என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு கோரி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.