சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70), தொழிலதிபர். இவரின் மனைவி ஈஸ்வரி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாராயணன்- ஈஸ்வரி தம்பதிக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் தனிமையில் வசித்து வந்த நாராயணன், மனைவி ஈஸ்வரியின் நினைவாகவே இருந்தார் எனக் கூறப்படுகிறது.
மனைவியின் நினைவில் இருந்து மீண்டுவர முடியாத அவர், தனது ஆத்ம திருப்திக்காக ஈஸ்வரியின் உருவத்தினை தத்ரூபமாக சிலிக்கான் சிலையாக செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகிய அவர், ஈஸ்வரியின் உருவத்தை தத்ரூப சிலிக்கான் சிலையாக செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.
ரூ.9 லட்சம் செலவில், தயாரான மெய்பிம்ப தத்ரூப சிலிக்கான் சிலை ஈஸ்வரியின் நினைவு நாளான மே 23-ந்தேதி சிவகாசியில் உள்ள நாராயணன் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்றனர். எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரியின் சிலிக்கான் சிலை வீட்டின் ஹாலில் உள்ள இதுமட்டுமல்லாமல், வீட்டுவாசலில் இரண்டு லட்சம் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் நாராயணன் நிறுவியுள்ளார்.
இதுகுறித்து குடும்பத்தினர் தெரிவிக்கையில், “ஈஸ்வரியின் நினைவு எப்போதும் எங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சிலிக்கான் சிலை செய்துவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது உள்பட அனைத்து விஷயங்களிலும் அவர் பங்கேற்கிறார் என்ற மனநிறைவு ஏற்படுகிறது” எனக் கூறினர்.
இறந்துபோன மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலையை நிறுவிய தொழிலதிபரின் செயல் சிவகாசியில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.