இந்தூர்: அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவை வெளியிட்டது. இந்த தேர்வை எதிர்கொண்ட தேர்வர்கள் அதற்கான முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தினர். அதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தேர்வர்களும் அடங்குவர். ஒரே முதல் பெயர், ஒரே ரோல் நம்பர் மற்றும் ஒரே ரேங்கை அவர்கள் இருவரும் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவரத்தை அவர்கள் இருவரும் அறிந்து கொண்டபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒருவர் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஆயிஷா பாத்திமா. மற்றொருவர் அதே மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஆயிஷா மக்ரானி. இருவரும் 184-வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் தான் அசலான தேர்வர் என்பதை நிரூபிக்க காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இதனை யுபிஎஸ்சி கவனத்திற்கும் கொண்டு சென்றனர். நீதி வேண்டும் என சொல்லி ஆயிஷா மக்ரானி இதை செய்திருந்தார். சுமார் இரண்டு ஆண்டு காலம் இதற்காக மிகக் கடுமையாக அவர் பயின்றுள்ளார். மறுபக்கம் எதிர்காலத்தில் இது போன்ற குழப்பம் நடைபெற கூடாது எனவும், இந்த சிக்கலைத் தீர்க்க தேவையானதை தனது தரப்பில் செய்ய தயார் என ஆயிஷா பாத்திமா தெரிவித்தார்.
அவர்கள் இருவரது நுழைவுச் சீட்டையும் உன்னிப்பாக வைத்து ஆராய்ந்து பார்த்ததில் ஆயிஷா மக்ரானியின் நுழைவுச் சீட்டில் சில முரண்கள் இருந்தது தெரியவந்தது. உதாரணமாக, அவரது பெர்ஸ்னாலிட்டி டெஸ்டுக்கான தேதி ஏப்ரல் 25, 2023 என குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் வியாழன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் ஏப்ரல் 25, செவ்வாய்க்கிழமை ஆகும். அதுவே ஆயிஷா பாத்திமாவின் நுழைவுச் சீட்டில் செவ்வாய்க்கிழமை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆயிஷா பாத்திமாவின் நுழைவுச் சீட்டில் தெளிவான வாட்டர் மார்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், ஆயிஷா மக்ரானியின் நுழைவுச் சீட்டில் அது இல்லை. அது வெறும் பிரிண்ட் அவுட் என்றே தெரிகிறது.
யுபிஎஸ்சி விளக்கம்: மூன்று நிலைகளை கொண்டது யுபிஎஸ்சி தேர்வு. முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு இதில் அடங்கும். இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வாகும்.
நேர்மையாக பரிந்துரைக்கப்பட்ட 2 தேர்வாளர்களுக்கு மாறாக குடிமைப் பணிகள் தேர்வில் தாங்கள் இறுதியாக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக 2 நபர்கள் தவறாக உரிமைக் கோரியிருப்பது குறித்து யுபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த இரு நபர்களின் உரிமைகோரலும் தவறானவை. தங்களின் உரிமைகளுக்கு சாதகமாக போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
யுபிஎஸ்சி நடைமுறை வலுவானது, எந்த தவறுக்கும் வழியில்லாதது. இவர்கள் கூறுவது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. போலியான இரு தேர்வர்களின் உரிமைகோரல்கள் தவறு என்பதற்கான விளக்கம் தரப்படுகிறது.
ஆயிஷா மக்ரானி த/பெ. சலீமுதீன் மக்ரானி என்பவரின் சரியான பதிவு எண் 7805064. இவர் 2022 ஜூன் 5-ந் தேதி நடைபெற்ற தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெறாதது மட்டுமின்றி அடுத்தகட்ட தேர்வுக்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 7811744 என்ற பதிவு எண் பெற்றுள்ள ஆயிஷா பாத்திமா த/பெ. நசீருதீன் உண்மையான தேர்வாளர் ஆவார். இவர் குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவில் 184-வது தரவரிசையைப் பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் 2208860 என்ற பதிவு எண் கொண்ட துஷார் த/பெ.பிரிஜ் மோகன் என்பவரும் தொடக்க நிலை தேர்விலேயே தேர்ச்சி பெற தவறியதோடு அடுத்தக்கட்டத்திற்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 1521306 என்ற பதிவு எண் கொண்ட பீகாரைச் சேர்ந்த துஷார் குமார் த/பெ. அஸ்வினி குமார் சிங் உண்மையான தேர்வாளர் 44-வது தரவரிசை பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
எந்தவித சரிபார்ப்பும் செய்யாமல் பல ஊடக அலைவரிசைகளும், சமூக ஊடகப் பக்கங்களும் பொறுப்பின்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. இது போன்ற செய்திகளை வெளியிடும் போது யுபிஎஸ்சி-யிடம் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்சி-யின் தேர்வு விதிகளின்படி தவறான தகவல்களை அளித்த இருதேர்வர்களும் குற்றமிழைத்திருப்பதோடு அவர்களின் மோசடியான செயல்களுக்காக சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.