சென்னை: சுற்றிலும் நிற்குது மேககூட்டம் ஆனால் எட்டித்தான் பார்க்க மாட்டிங்கு மழை. இந்நிலையில் வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
வட தமிழகத்தை பொறுத்தவரை பெரிதாக மழையே இல்லை.. வெப்பசலனத்தால் வெந்து போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தர வேண்டிய மழை திசை மாறி சுற்றித்திரிவதால், புழுக்கத்தில் தவிக்கிறார்கள்.
அதே நேரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் குரு 9ம் நம்பர் இடத்தில் இருக்கிறது போல, அங்கு தான் கொட்டிக்கொண்டே இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்த மாதம் நல்ல மழை பெய்தது.
ஆனால் வட தமிழகத்திற்கு மட்டும் சூரியன் தான் உச்சத்தில் இருக்கிறது. நேரடியாக சூரியன் ரெஸ்ட் எடுத்துட்டு போகும் இடமாக வடதமிழகத்தை வச்சு செய்து வருகிறது. பகலில் வெயிலின் கொடுமை என்றால், இரவில் புழுக்கம் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது. நேற்று மாலை சில்லென்ற காற்று ஆங்காங்கே வீசியது, சிறியதாக மழை சில இடங்களில் எட்டியும் பார்த்தது. ஆனால் பூமியின் வெப்பத்திற்கு அந்த மழை எங்கு போனது என்றே தெரியவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம். வட தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ட்விட் பதிவில் கூறியுள்ளார். ” மிகவும் வலுவான மற்றும் சுழற்றி அடிக்கும் காற்று, நிறைய காற்றுடன் மேகங்களைக் கொண்டு வருகிறது. வட தமிழ்நாட்டின் இன்றைய வெப்பத்திற்கு சற்று நிவாரணம் தரும் என்று நினைக்கிறேன். மேகத்தையும் காற்றையும் அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார். அதாவது வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.