சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உட்பட மாநிலத்தின் பல இடங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் இருந்து வருகிறது.
கடுமையான புழுக்கத்தால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வங்கக்கடலில் உருவான மோக்கா புயலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணமாக இருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை மோக்கா புயல் உறிஞ்சியதும் காற்றின் திசை மாறியதும் தமிழகத்தில் வெயில் கொளுத்த காரணம் என கூறப்பட்டது. அதோடு நாடு முழுவதும் வெப்ப அலையும் வீசி வந்தது.
இந்நிலையில் வெப்ப அலை நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை பகல் நேரத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு ஆறுதலாக அமைந்தது. இருப்பினும் சென்னை நகர் பகுதிக்குள் மழை பெய்யாதது மக்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூல் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று உள்ளே நுழைவதாக தெரித்துள்ளார்.
இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வட தமிழகத்திற்கு சற்று விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மேகமூட்டத்தையும் காற்றையும் கொண்டாடுங்கள் என கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வெறும் காற்று மட்டும்தானா? மழை பெய்யாதா என கேட்டு வருகின்றனர்.
இதனிடையே காட்டுமன்னார் கோயில், திருமூலஸ்தனம் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மற்றும் சேலம் மாவட்டத்தின் அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பட்டி, உடையாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிற்பகளுக்கு பிறகு கன மழை பெய்து வருகிறது.