ஹார்லி-டேவிட்சன் வெளியிட்டுள்ள புதிய X 440 ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற பைக்கின் படங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 350, ஹோண்டா CB350RS உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் நவீனத்துவமான ஹார்லியின் வடிவமைப்பினை கொண்டு ஹீரோ மோட்டோ கார்ப் தயாரிக்க உள்ளது.
முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் விளக்கு மற்றும் மேல்நோக்கிய எக்ஸாஸ்ட் கொண்டுள்ள பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் வழங்கப்பட்டிருக்கும்.
X440 ஆனது 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள ஹார்லி X440 பைக்கில் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களை ஹார்லி-டேவிட்சனின் XR1200 பிரீமியம் ஸ்போர்ட்டிவ் பைக்கின் வடிவ தாத்பரியத்தை கொண்டிருக்கின்றது.
தனித்துவமான டவுன்ட்யூப் ட்யூபுலர் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள X 440 பைக்கில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் மோடுகள் இடம்பெற்றிருக்கலாம்.
எக்ஸ் 440 பைக்கின் முன்புறத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் வீலுடன் எம்ஆர்எஃப் டயரினை பெற்றுள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப் சர்வதேச புதுமை மற்றும் தொழில்நுட்ப மையம் (CIT) மற்றும் ஹார்லி-டேவிட்சன் இந்தியா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள X 440 ரோட்ஸ்டெர் பைக்கின் விலை சுமார் ரூ. 2.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆக துவங்கலாம். வரும் ஜூலை 3, 2023-ல் விலை அறிவிக்கப்பட உள்ளது.