கேரளாவில் ஹோட்டல் அதிபரை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேஸ் மற்றும் பையில் அடைத்து பள்ளதாக்கில் வீசிய வழக்கில் அண்ணன், தங்கை, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமிற்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காதல் ஜோடியை போலீசார் மடக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
கேரளாவை மீண்டும் உலுக்கியுள்ள கொடூர கொலை சம்பவத்தில்.., கண்டந்துண்டமாக வெட்டி சூட்கேஸ் மற்றும் பையில் வைத்து, பள்ளத்தாக்கில் வீசப்பட்ட ஹோட்டல் அதிபர் சித்திக் இவர் தான்……..
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சித்திக், மலப்புரம் மாவட்டம் திரூரில், தங்கும் அறைகளுடன் கூடிய ஹோட்டல் நடத்தி வந்தார். குடும்பத்தினர் கோழிக்கோட்டில் இருக்க, தனது ஹோட்டலின் மாடியிலேயே, சித்திக் தங்கியுள்ளார். இந்நிலையில், சில தினங்களாக அவரை காணவில்லை என திரூர் காவல்நிலையத்தில், சித்திக் குடும்பத்தினர் புகார் அளித்ததோடு, அவரது செல்போனையும் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், சித்திக் மொபைல் போனுக்கு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து, ஏடிஎம் கார்டு மூலம், 2 லட்ச ரூபாய் வரையில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து எஸ்எம்எஸ்-கள் வந்துள்ளன. ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் பணம் எடுத்துச் செல்வது குறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே, பள்ளத்தாக்கு ஒன்றின் நீரோடை அருகே, சூட்கேஸ் ஒன்றும், பெரிய பை ஒன்றும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதில் 50 வயது மதிக்கத்தக்க நபரின், கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதை கண்டு மீட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்களின் பட்டியலை தயார் செய்த போலீசார், அவை சித்திக்கின் உடல் பாகங்கள் தான் என்பதை உறுதி செய்தனர்.
அதேசமயத்தில், ஏடிஎம் சிசிடிவி காட்சியில் உள்ள நபருக்கும் சித்திக்கிற்கும் என்ன தொடர்பு என போலீசார் விசாரித்தபோது, அந்த இளைஞர், சித்திக்கின் ஹோட்டலில் 15 நாட்களுக்கு முன்பு பணிக்குச் சேர்ந்த முகமது சிபிலி என்பது தெரியவந்துள்ளது.
அவனது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், அவன், 18 வயதான ஃபர்கானா என்ற இளம்பெண்ணுடன், அடிக்கடி பேசி வந்ததை கண்டறிந்ததோடு, இருவரும் தலைமறைவானதை அறிந்து, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர். இரண்டு பேரின் புகைப்படங்களையும் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில போலீசாருக்கும் அனுப்பியதோடு, ரயில்வே போலீசாரையும் உஷார் படுத்தினர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், பெங்களூரில் இருந்து அசாம் செல்லும் தின்சுக்கியா எக்ஸ்பிரசில் ஏற முயன்ற இருவர் மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரித்ததில், அந்த ஜோடி தான், முகமது சிபிலி, ஃபர்ஹானா என்பதை உறுதி செய்தனர்.
காதல் ஜோடிகளான தங்களை பெற்றோர் தேடுவதாகவும், அவர்கள் வெள்ளிக்கிழமை வந்து அழைத்துச் செல்வார்கள் எனவும், நைசாக பேசி, நம்பவைத்து, அவர்களிடம் இருந்த 16 ஆயிரம் ரூபாய் மற்றும் பாஸ்போட்டை பறிமுதல் செய்து, கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, சித்திக் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முகமது சிபிலி, ஃபர்ஹானாவுடன், மேலும் இருவர் சேர்ந்து சித்திக்கின் உடல் பாகங்கள் வைக்கப்பட்ட சூட்கேசை காரில் ஏற்றுவதை கண்டு விசாரித்தனர். இருவரில் ஒருவர், ஃபர்ஹானாவின் அண்ணன் சுக்கூர் என்பதும், மற்றொருவன், அவனது நண்பர் ஆசிக் என்பதையும் கண்டறிந்து இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், சித்திக்கை கொன்று, உடலை வெட்டி எடுத்து வந்து, அட்டப்பாடி மலைப்பகுதியில் வீசிவிட்டு, தமிழ்நாடு-கேரள எல்லைக்கு வந்து, சென்னை செல்லும் பேருந்தில், முகமது சிபிலி மற்றும் ஃபர்ஹானாவை ஏற்றிவிட்டதாக தெரிகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.