20% உடைகளை மட்டுமே உங்களுக்குப் பிடிக்கும்…! அலமாரியை அழகுபடுத்துவோம்! | மினிமலிசம் – 19

உங்கள் வாழ்க்கையை உடனடியாக மேம்படுத்த விரும்பினால், ஓர் அலமாரியை சுத்தம் செய்யுங்கள். ஏனெனில், நாம் எதைப் பிடித்துக் கொள்கிறோமோ அதுவே நம்மைத் தடுத்து நிறுத்துகிறது!

ஆம்… உடைகள் விஷயத்துக்கு இந்தப் பொன்மொழி மிகவும் பொருந்தும். உங்கள் வார்ட்ரோபில் நீங்கள் அணியாவிட்டாலும் உணர்வுபூர்வமான காரணங்களுக்காகவே வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் – குறிப்பாக உடைகள் நிறையவே இருக்கும். அன்பானவர்களிடமிருந்து பெற்றது அல்லது ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தில் நீங்கள் அணிந்த உடைகள் இருந்தால், அவை என்றென்றும் தேவை என நீங்கள் கருதினால், அவற்றைப் பத்திரப்படுத்த ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கவும். ஒரு நல்ல நினைவகப் பெட்டியைக் கண்டுபிடித்து, அதை உங்கள் வீட்டில் வேறு எங்காவது வைக்கவும். அன்றாடம் பயன்படுத்தப்படுகிற ஓர் அலமாரியில் அந்தப் பொக்கிஷங்கள் இருக்க வேண்டியதில்லையே!

உடை | மாதிரிப் படம்

உங்கள் துணிகளை வைத்துக்கொள்வதற்கு உங்களுக்கு குறைவான இடமே உள்ளது என்பதே உண்மை. திருமண உடையைப் போன்ற ஓர் உடை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தால், உங்கள் வார்ட்ரோப்பைத் தவிர வேறோர் இடத்தைக் கண்டறியவும். அதேபோல, நீங்கள் ஒராண்டுக்கும் மேலாக ஒர் உடையை அணியவில்லை என்றால், கண்ணீர் வந்தாலும் பரவாயில்லை… தயங்காமல் அதை அகற்றவும்.

ஒன்று உள்ளே… மூன்று வெளியே!

தவிர்க்க முடியாத காரணங்களால் புதிதாக ஓர் உடையை நீங்கள் வாங்குகிறீர்கள் அல்லது அன்பளிப்பாகக் கிடைக்கிறது எனக் கொள்வோம். அப்படி நீங்கள் மீண்டும் ஒரு புதிய உடையை வார்ட்ரோப்புக்குள் வைக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் மூன்று உடைகளை வெளியேற்ற வேண்டும் என்பதை ஒரு விதியாகப் பின்பற்றுங்கள். ஏற்கெனவே இருக்கும் உடைகளை நல்ல முறையில் பயன்படுத்தலாமா அல்லது மேற்கண்ட விதிக்கு உட்பட்டு புதிய உடை வாங்கலாமா என்று முடிவெடுப்பது இப்போது எளிதாகிவிடும்.

உடைகள் | மினிமலிசம்

நினைவில் கொள்ளுங்கள், இது வெறும் உடை மட்டுமே!

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்… இவர்களையும் நம் உடைகளையும் ஒன்றுபோலவே பாவிக்க முடியாது அல்லவா? உங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றோடு பொருள்களை இணையாகக் கருத முடியாதல்லவா? சற்றே யோசித்தால் போதும்… நம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர முடியும்.

உணர்வுபூர்வமான உடைகளை மீண்டும் பயன்படுத்தவும்!

நீங்கள் விரும்பும் உடைகளை முற்றிலுமாக அகற்றுவதற்கு பதிலாக, அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான (ரீ-சைக்ளிங்) வழியைத் தேடுங்கள். அவற்றை தலையணை உறைகளாகவோ, பொம்மைகளுக்கான உடைகளாகவோ, கலைப்பொருள்களின் ஒரு பகுதியாகவோ மாற்றி, நினைவுப் பொருள்களாக்கலாமே!

பி.கு: இதிலும் ஓர் அளவு, கட்டுப்பாடு மிக அவசியம். எல்லா உடைகளும் உணர்வுபூர்வமானவை என முடிவெடுத்து வீட்டையே ஒரு கலைக்கூடமாக மாற்றிவிட வேண்டாம்!

மினிமலிசம்

விலை உயர்ந்தவை என்பதற்காகவே..?

ஆடைகள் விலை உயர்ந்தவை என்பதாலேயே அவற்றை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் அவற்றை அணிந்த காலங்களிலிருந்து நினைவுகளை அசைபோடுங்கள். அதற்கு எந்தச் செலவும் இல்லை. இடத்தையும் அடைக்காது!

தேவையற்றவற்றை அகற்றும் செயல்முறையை தவறாமல் செய்யவும். உங்கள் வார்ட்ரோப் மீண்டும் குழப்பமடையும் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வது நல்லது. இந்தச் சிக்கலைச் சமாளிக்க வழக்கமான அடிப்படையில் மீண்டும் தேவையற்றவற்றை அகற்றும் செயல்முறையைச் செய்வது பயனுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறையாவது இந்தச் செயல்முறையை மேற்கொள்வது நலம் தரும்.

இன்றே அணியுங்கள்!

நீங்கள் அடிக்கடி அணியாத ஒன்றைக் கண்டாலோ, அதைக் கைவிட முடியாமல் சிரமப்பட்டாலோ, இன்றோ அல்லது அடுத்த இரண்டு நாள்களிலோ அதை அணிந்துகொள்ளுங்கள். இதன் மூலம், அது எவ்வாறு பொருந்துகிறது, எப்படி உணர்கிறீர்கள் என அறிவதன் மூலம், நீங்கள் அதை இன்னமும் வைத்திருக்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான மக்கள் தங்களுக்குப் பிடித்த சிறிய உடைகளையே பெரும்பாலான நேரங்களில் அணிவார்கள். உண்மையில், பெரும்பாலான மக்கள் தங்கள் 20% உடைகளையே 80% நேரங்களில் அணிவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

உடைகள் | மினிமலிசம்

உங்கள் எதிர்கால வார்ட்ரோப் எப்படி இருக்கும்?

எந்த உடைகளை அகற்றுவது என்பதை நீங்கள் தீர்மானிக்கத் தொடங்குவதற்கு முன், நீங்கள் விரும்பும் பாணியின் (ஸ்டைல்) உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிய விரும்பும் ஃபேஷன் உடைகளை பற்றி யோசித்துப் பாருங்கள். அவை உங்களுக்கு நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்தானே? நீங்கள் விரும்பும் தோற்றத்தை பற்றி உங்களுக்குத் தெளிவு கிடைத்தவுடன், உங்கள் வார்ட்ரோப்புக்குள் கண்களையும் கைகளையும் அனுப்பி, உங்கள் பாணிக்குப் பொருந்தாத எல்லாவற்றையும் வெளியே எடுத்துவிடவும்.

அந்த இடத்தை ஒழுங்கீனப்படுத்தும் சில உடைகளை எடுத்துவிட்டால், உங்கள் வார்ட்ரோப் எவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

(குறைப்போம்!)

– சஹானா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.