Denial of admission to Puducherry Government Medical College | புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில், சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் களையப்படாததால், இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி இருந்தாலும், அதில் படிக்க புதுச்சேரி மாணவர்கள் அகில இந்திய அளவில் போட்டி போட வேண்டும். இதனால் புதுச்சேரிக்கு என தனி மருத்துவக் கல்லுாரி துவங்க, கடந்த 2005ம் ஆண்டு முதல்வர் தலைமையில் காமராஜர் மருத்துவ கல்லுாரி சங்கம் துவங்கி, கதிர்காமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லுாரி கட்டப்பட்டது.

latest tamil news

இக்கல்லுாரி கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கவும், 150 மாணவர் சேர்க்கைக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால், புதுச்சேரி மாநில மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

இந்திய மருத்துவக் கவுன்சில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லுாரிகளில் பாடம் நடத்த போதுமான சீனியர் பேராசிரியர்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கும்.

இதன்படி கதிர்காமம் மருத்துவக் கல்லுாரி துவங்கியதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து குறைகளை சுட்டி காட்டுவதும், அதை சரிவர செய்து முடிக்காமல், மத்திய அரசிடம் கெஞ்சி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்., மாதம் நடந்த எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மற்றும் கடந்த ஜனவரி மாதம் நடந்த நேரடி ஆய்வில், கற்பித்தல் பணிக்கு போதிய சீனியர் டாக்டர்கள் இல்லாதது மற்றும் சி.சி.டி.வி., கேமரா இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த ஏப். 17ம் தேதி கடிதம் அனுப்பியது.

latest tamil news

மருத்துவக் கல்லுாரி தரப்பில், கடந்த 15ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விளக்கத்தை ஏற்க மறுத்த இந்திய மருத்துவ கவுன்சில், 2023-24ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான கடிதம் மருத்துவ கல்லுாரி டீனிற்கு அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இது தொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி, மேல் முறையீடு செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.