இசை: டி. இமான்
நேரம்: 2 மணி நேரம் 32 நிமிடங்கள்
சென்னை: சாதி, மத அரசியலை வைத்து ஏகப்பட்ட படங்கள் உலகம் முழுவதும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் சினிமாவிலும் நிறைய படங்கள் இதற்கு முன்னதாக வந்துள்ளன.
அந்த வரிசையில் இன்னொரு படமாக இந்த வாரம் அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் கழுவேத்தி மூர்க்கன்.
சமீபத்தில் வெளியான சாந்தனுவின் இராவணக் கோட்டம், தெலுங்கில் வெளியான நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா உள்ளிட்ட படங்களிலும் நண்பர்கள் உயிருக்கு உயிராக பழகுவார்கள், பின்னர் நண்பனின் மரணத்துக்காக நாயகன் பழி வாங்குவது, கீழ் சாதி, மேல் சாதி பிரச்சனை என்பதே கதையாக இருக்கும். இந்தப் படத்திலும், அதே போன்ற கதை தான் என்றாலும், திரைக்கதையாக எப்படி வந்திருக்கிறது என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
த்ரில்லர் டு ஆக்ஷன் ஹீரோ:
பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் அறிமுகமான அருள்நிதி அந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதைகளை தேர்வு செய்வதை விட்டு விட்டு த்ரில்லர் கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
டிமான்டி காலனி உள்ளிட்ட ஒரு சில படங்களே அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் கிராமத்து ஆக்ஷன் ஸ்டைல் படத்தில் நடித்து கெத்துக் காட்டி உள்ளார். கழுவேத்தி மூர்க்கன் படத்தில் மூர்க்கையன் (கோபக்காரன்) பெயருக்கு ஏற்றவாறே முதல் காட்சி முதல் கிளைமேக்ஸ் காட்சி வரை நடித்து மிரட்டி உள்ளார் அருள்நிதி.
கழுவேத்தி மூர்க்கன் கதை:
இராவணக் கோட்டம் படத்தில் வந்ததை போல இந்த படத்திலும் ராமநாதபுரம் மேலத்தெரு, கீழத்தெரு பிரச்சனையைத் தான் இயக்குநர் கவுதம் ராஜ் கையாண்டுள்ளார்.
மேலத்தெருவை சேர்ந்த நாயகன் அருள்நிதிக்கு கீழத்தெருவை சேர்ந்த சந்தோஷ் பிரதாப்புக்கும் சிறு வயது முதலே நல்ல நட்பு ஏற்படுகிறது. சிறு வயதில் அருள்நிதியின் உயிரை சந்தோஷ் பிரதாப் காப்பாற்றுவதால் அந்த நட்பு மலர்கிறது. ஆனால், சாதிய வெறியில் ஊரிப்போன அருள்நிதியின் அப்பா யார் கண்ணனுக்கு இவர்களின் நட்பு சுத்தமாக பிடிக்கவில்லை.
முன்னாள் ஊர் தலைவராக செயல்பட்டு வந்த யார் கண்ணன் கட்சியில் தற்போது ஆளுமை செலுத்தி வரும் வில்லன் ராஜசிம்மன் கட்சியில் தனது பலத்தைக் காட்ட ஊர் முழுக்க பேனர் வைக்கிறார். அப்போது அவர் வைத்த பேனரை சந்தோஷ் பிரதாப் கிழிக்க அதன் மூலம் நடக்கும் சண்டையில் சந்தோஷ் பிரதாப் அடுத்த கலையரசனாக மாறி இந்த படத்திலும் கொல்லப்படுகிறார்.
ஆனால், செம ட்விஸ்ட்டாக அந்த கொலைப் பழி அருள்நிதி மிது விழ, தப்பித்து தலைமறைவாகும் அருள்நிதி தனது உயிர் நண்பனை கொன்றவர்களை தேடிப் பிடித்து சூரசம்ஹாரம் செய்வது தான் இந்த கழுவேத்தி மூர்க்கன் படத்தின் கதை.
பிளஸ்:
அருள்நிதிக்கு கழுவேத்தி மூர்க்கன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி போகுது. நாயகியாக வரும் துஷாரா விஜயன் காதல் காட்சிகளில் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். அந்த கிஸ் சீன் வேறலெவல் சம்பவம். சண்டைக்காட்சிகளில் மாஸ்டர் கணேஷ் குமார் புழுதி பறக்க, ரத்தம் தெறிக்க, வீரம் திமிர சண்டைக் காட்சிகளை அமைத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்ஷன் படத்தையே கொடுத்திருக்கிறார்.
டி. இமானை கொஞ்ச நாட்களாக காணவில்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணியில் மனுஷன் பிரித்து மேய்ந்திருக்கிறார். சாதிய படமாக செல்லாமல், சாதியத்தை தாண்டி மனிதத்தையும் நட்பையும் கடைபிடிக்க வேண்டும் என்கிற படமாகவே அமைந்தது இந்த படத்திற்கு பெரும் பிளஸ் ஆக மாறி உள்ளது.
மைனஸ்:
படத்தின் கதை பல படங்களில் பார்த்த அதே விஷயம் தான். மேலத்தெரு, கீழத்தெரு கான்செப்ட்டில் இன்னும் எத்தனை படங்கள் வரப் போகுது தெரியவில்லை. பாட்ஷா காலத்தில் இருந்தே நண்பன் மரணத்துக்கு ஹீரோ பழிவாங்குவது புதிதல்ல. யூகிக்கக் கூடிய கதையில் இந்த படம் உருவானது தான் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால், திரைக்கதை மற்றும் மேக்கிங் காரணமாக பழைய படத்தை பார்த்த ஃபீல் வராமல் இயக்குநரும் ஹீரோ அருள்நிதியும் பார்த்துக் கொண்ட நிலையில், படம் வெற்றிப்படமாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளன.