புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு தொடர்பான பொதுநல மனு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சுமார் 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினம் அந்தக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே `தமிழகத்தின் செங்கோல்’ நிறுவப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். `பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை 28-ம் தேதி திறந்து வைப்பார்’ என்ற அறிவிப்பு வெளியானது முதலே, எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும், `பிரதமர் மோடி திறந்து வைப்பது முறையாக இருக்காது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும். அதேபோல, சாவர்க்கரின் பிறந்தநாளான 28-ம் தேதியன்று, நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ எனத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்பதும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சிகள் இந்த நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசுபொருளான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், `புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனு இன்றைய தினம், நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வருகிறது.