கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு, திராவிட மாடல் மற்றும் ஆன்மீகத்திற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனைகளை வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுக்க இது தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
சாதனை மலர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சாதனை மலரை வெளியிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ. 68,970 கோடி மதிப்பிலான 31,73,972 நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் 635 பயனாளிகளுக்கு அந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ வ வேலு, திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் திராவிடமும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் தெரிவித்தார். மேலும், திராவிட ஆட்சியில் தான் ஆன்மீகம் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் புனரமைப்பு பணிகள் குறித்தும் பேசினார்.
எ.வ. வேலு:
அமைச்சர் எ.வ.வேலு மேலும் கூறுகையில், “வரும் காலத்தில் நம்மால் திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது… திராவிட ஆட்சியில் தான் ஆன்மீகம் பாதுகாக்கப்படும். இந்த திராவிடமும் ஆன்மிகமும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. மாவட்டம் முழுக்க இருக்கும் கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருவதே இதற்குச் சாட்சி..
தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளது. அதை இந்த இரண்டு ஆண்டு சாதனை மலரில் விளக்கியுள்ளோம். அதை உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு சென்று தேர்க்க வேண்டும். இந்த ஆட்சியில் மக்கள் பெற்ற எண்ணற்ற பலன்கள் குறித்து மக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகளே விளக்க வேண்டும்.
மக்களிடம் செல்லும் அரசு:
இப்போதுள்ள தமிழக அரசு மக்களைத் தேடிச் செல்லும் ஆட்சியாக உள்ளது. ஒவ்வொரு திட்டமும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி.. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி.. உயர்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்று எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல்.
கள்ளக்குறிச்சியில் இப்போது எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சியில் புறவழிச் சாலை அமைக்கத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்போது உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்டு வரும் சிப்காட் மூலம் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.