புதிய நாடாளுமன்ற கட்டட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; செங்கோல் என்பது நேர்கோல் ஆகும். செங்கோல் என்பது அரசு சின்னங்களுள் ஒன்றாக போற்றப்பட்டது. ஒரு மன்னனுக்கு மகுடமும், அரியணையும் எப்படி முக்கியமோ, அதுபோல் செங்கோலும் இன்றியமையாதது.
தமிழகத்தில் மன்னர் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதிய மன்னரின் கரங்களில் செங்கோலை அளித்து ராஜகுரு ஆசிர்வதிப்பது மரபு. நீதிநெறி வழுவாமல் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் இந்த செங்கோல். ஓர் ஆட்சி எப்படி நீதி நெறி தவறாமல் நடக்க வேண்டும் என்பதை செங்கோன்மை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த செங்கோல், இந்திய நாடு சுதந்திரம் பெற்றபோது, ஆட்சி மாற்றத்தினை அடையாளப்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு மவுண்ட்பேட்டன் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார் என்பதும், இதற்கு வழிகாட்டியாக இருந்தவர் மூதறிஞர் ராஜாஜி என்பதும், இந்தச் செங்கோலை இந்தியாவின் பாரம்பரிய சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர் மேற்கொண்டார் என்பதும், இதனை சென்னை, உம்மிடி பங்காரு அணிகலன் நிறுவனம் வடிவமைத்தது என்பதும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும்.
இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் 28-05-2023 அன்று திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழகத்தின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம்பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல.
மாநிலங்களுக்கான சட்டமன்றப் பேரவைக் கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட மிகப் பெரிய அளவிலான புதிய கட்டடங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களால் திறக்கப்படுகிறதோ, அதேபோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் திறக்கவிருக்கிறார்கள். இதில் தவறேதுமில்லை. இதுதான் பொருத்தமானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2010 ஆம் ஆண்டு தமிழக அரசின் சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகக் கட்டடம் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதுபோன்று பல உதாரணங்கள் பல மாநிலங்களில் உள்ளன. இதனை அரசியலாக்குவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்கி, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.