திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ‘எல்ஃபின்’ என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனமானது, ‘எங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதோடு, உங்களுடைய பணத்தை மும்மடங்காக திருப்பித் தருவோம்’ என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது.
இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இந்நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தனர். பணம் குவிந்ததும் எல்ஃபின் நிறுவனத்தினர், நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். அதையடுத்து இந்த நிறுவனத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்க, எல்ஃபின் நிறுவனத்தை நடத்தி வந்த ராஜா (எ) அழகர்சாமி மற்றும் அவரின் சகோதரரான ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், எல்ஃபின் நிறுவனத்தின் இயக்குநர்களிடம் தொடர்பிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் மீதும் புகார்கள் வரிசை கட்டத் தொடங்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபாகரன் வீட்டிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். இப்படியான நிலையில் எல்ஃபின் நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரபாகரனை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவரை டான்பிட் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் திருச்சி மாநகராட்சியின் 17-வது வார்டு கவுன்சிலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.