இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 12 உயிர்களை காவு வாங்கிய அரிசி கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கழுத்தில் சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது.
முதலில் அரிசி கொம்பனை பிடித்து பாலக்காடு பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயில் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்து அங்கிருந்து மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையின் வடக்குப்பகுதியில் இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. இன்று காலை லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. கம்பம் கூலத்தேவர் தெரு பகுதியில் வந்த யானையை கண்டு அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்றனர். மேலும் பலர் யானையை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் வேகமாக ஓடிய யானை சாலையில் நின்றிருந்த சேர் ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு ஓடியது. யானை வரும்போது ஓடியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனி மாவட்ட வனத்துறையினர் யானையை கம்பம், கம்பம் மெட்டு இடையே வனப்பகுதியில் விரட்ட முயன்றனர். தற்போது யானை மலை அடிவாரப்பகுதியில் புளியந்தோப்பில் முகாமிட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசியபோது, “யானையை விரட்டக் கூடாது, அதன்போக்கிலேயே விட வேண்டும். குறிப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை “என்றனர்.