கரூர், கோவை, சென்னை என்று தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தொடர்புடைய, 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றுமுதல் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அங்கு குவிந்த தி.மு.க தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த களேபரத்தில் தி.மு.க குமார் என்பவர், பெண் அதிகாரி காயத்ரியால் தாக்கப்பட்டதாக திமுக-வினர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் வந்த கார் ஒன்றின் கண்ணாடியும் தி.மு.கவினரால் அடித்து உடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
இதனால், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற இருந்த ரெய்டை நிறுத்திய அதிகாரிகள், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் சென்று, பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். வருமானவரித்துறை அதிகாரிகளும் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில், தி.மு.க – வினரால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாலை ஐந்து மணிக்கு பிறகே மறுபடியும் வருமானவரித்துறை சோதனை தொடங்கியது. க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு கல் குவாரிகள், சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள இரண்டு தொழில் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
பாதுகாப்புக்காக, திருச்சியில் இருந்து அதிரடி படையினரும், கமாண்டோ படையினரும் வரவழைக்கப்பட்டனர். இன்னொருபக்கம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணனின் ராயனூர் பகுதியில் உள்ள வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு பதினொன்றரை மணி அளவில் சோதனைக்காக சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் நோட்டீஸை கதவில் ஒட்டியதுடன், சீல் வைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் நோட்டீஸை வீட்டுக்குள் இருப்பவர்கள் வாங்கத் தயாராக இருந்தும் அதிகாரிகள் நோட்டீஸை கதவில் ஒட்டி கதவிற்கு சீல் வைத்ததாக கூறி, தாரணி சரவணன் வீட்டின் முன்பு அமர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக தர்ணா செய்தனர்.
இதனால், சம்பவத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீஸார், அங்கு அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, வீட்டின் காம்பவுன்ட் கேட்டுகளில் சீல் வைக்கப்பட்ட நோட்டீஸை பிரித்து, வீட்டுக்குள் சென்று தாரணி சரவணனின் உறவினர்களிடம் வழங்கினர். இந்நிலையில், இன்று காலையில் இருந்து வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.