IPL 2023 Shubman Gill: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், தற்போது மதிப்புமிக்க ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறார். தற்போது அவர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். இந்த தொடரில், 16 போட்டிகளில் விளையாடி 851 ரன்களை குவித்துள்ளார். நேற்றைய குவாலிஃபயர் 2 போட்டியில், மும்பை அணிக்கு எதிராக அசாத்திய ஆட்டத்தை விளையாடி சதமடித்து, வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தார்.
கூல் புகைப்படம்
இந்நிலையில், சுப்மன் கில் ஆரஞ்சு தொப்பியை அணிந்து கெத்தாக, ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த படத்தில், கில் ஒரு ரிலாக்ஸான தோரணையில், ஆரஞ்சு நிற தொப்பியுடன் முகத்தை மறைத்திருப்பதைக் காணலாம். அவர் புகைப்படத்துடன் ஆரஞ்சு நிற இதயம் மற்றும் ஸ்லீப்பிங் எமோடிகான்களைக் கொண்ட கேப்ஷன் இட்டுள்ளார்.
pic.twitter.com/YSBIzHer8i
— Shubman Gill (@ShubmanGill) May 27, 2023
ஸ்ட்ரைக் ரேட் உயர்வு
கில் 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் நேற்றைய போட்டியில், 129 ரன்கள் எடுத்தார். இது 215 ஸ்டிரைக் ரேட்டில் வந்தது என்பது பிசிசிஐ தேர்வாளர்களை மகிழ்வித்து அவரை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கில் டி20 பேட்டிங்கில் மிகவும் தடுமாறுகிறார் என்று விமர்சிக்கப்பட்டார், ஆனால் இந்த சீசனில் அவர் தனது ஸ்ட்ரைக் ரேட்டையும் உயர்த்தியுள்ளார்.
ஆரஞ்சு தொப்பி
கில் இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் ஃபாஃப் டு பிளெசிஸை (730 ரன்கள்) பின்னுக்குத் தள்ளினார். இந்த தொடரில் அவரின் சராசரி 60.79 மற்றும் ஸ்டிரைக் ரேட் 156.43 ஆக உள்ளது.
விராட் கோலி
2016ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டார் விராட் கோலி 16 போட்டிகளில் 81.08 சராசரி மற்றும் 152.03 ஸ்டிரைக் ரேட் என மொத்தம் 973 ரன்கள் குவித்து இதேபோன்ற உச்சத்தை எட்டினார். இந்த ஐபிஎல் தொடரில் கோஹ்லி 7 அரைசதங்களையும், 2 சதங்களையும் விளாசினார். ஐபிஎல் சீசனில் அவரை விட அதிக ரன் மற்றும் சதம் அடித்தவர்கள் யாரும் இல்லை. இந்த இரண்டு சாதனைகளுக்கும் பிறகு கில் உள்ளார். கோஹ்லியின் 973 ரன்களை வீழ்த்த கில்லுக்கு இன்னும் 123 ரன்கள் தேவை. அதை அவர் சாதித்தால், அதிக டன் சாதனையையும் முறியடிப்பார்.
இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, குஜராத் அணி நாளை சந்திக்கிறது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் கில் ஏற்கெனவே பல சாதனைகளை படைத்துள்ளதால், நாளைய போட்டி மிது பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அவரின் அதிரடியை தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.