சென்னை: கட்டிடங்கள், பாலங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை உள்ளடக்கிய அனைத்து சிங்கார சென்னை 2.0 திட்டங்களுக்கும் 21 நகர்ப்புற திட்டமிடுபவர்களை சென்னை மாநகராட்சி புதிதாக இணைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக 23 வருடங்களுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ், சென்னை நகரை அழகுபடுத்த ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டததிற்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த காலக்கட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து பக்கபலமாக செயல்பட்டவர் ஆவார். தற்போது ஸ்டாலின் முதல்வராக உள்ள நிலையில், அவரது கனவுத்திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை நிறைவேற்ற தீவிரமாக இறங்கி உள்ளார்.
கட்டிடங்கள், பாலங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை உள்ளடக்கிய அனைத்து சிங்கார சென்னை 2.0 திட்டங்களுக்கும் 21 நகர்ப்புற பிளானர்களை சென்னை மாநகராட்சி இணைத்துள்ளது.
அரசு கட்டிடங்களை கட்டும் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள், மக்களுக்கு பிடித்தமாதிரியான சிறந்த வடிவமைப்பை உருவாக்க வேண்டும். அது அழகாகவும் ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதற்கு மக்களுடன் கலந்து ஆலோசித்து முன்மாதிரிகள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டு வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் கூறுகையில், “குடிமராமத்து பணிகளை செய்யும் போது கட்டிடம் கட்டுவதில் மட்டுல்ல, வடிவமைப்பு மற்றும் அழகியலில் கவனம் செலுத்த வேண்டும். கட்டிடக் கலைஞர்கள் அதை செய்ய வேண்டும். இரண்டாவதாக, கட்டிட வடிவமைப்புகள் உள்ளூர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது மக்களுக்கான சமூக திட்டங்கள் என்பதால் மக்களின் வாழ்க்கையில் நம்முடைய கருத்துக்களை திணிக்க முடியாது.
பல முக்கிய நகரப் பகுதிகளுக்கு பாரம்பரிய கட்டமைப்புகள் மற்றும் அழகான அடையாளங்கள் உள்ளன, மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கும் இதே போன்ற கட்டமைப்புகள் தேவை .அம்பத்தூர், ஓஎம்ஆர் மற்றும் பிற விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
இது தொடர்பாக அமுதசுரபி கட்டிடக் கலைஞர்களின் நிறுவனர் அமுதா கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகளுக்கு கட்டிடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான பூங்காக்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். மேலும், தேவையான வசதிகளுடன் கூடிய மின் மயானத்தை நவீனமயமாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நிறுவனமான VBS டிசைன் அலுவலகத்தின் முதன்மை கட்டிடக் கலைஞர் எஸ் பாப்ஜி கூறுகையில், பல திட்டங்களுக்கும், சரியான மற்றும் தெளிவான வடிவமைப்புகள் தேவை. குறிப்பாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளக்குகள் வைப்பதற்கு உள்கட்டமைப்பு தளங்களை சரியான முறையில் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு கட்டணம் செலுத்தி பார்க்கிங் இடங்கள் போன்ற கட்டிடங்களை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்ற போகிறோம்” என்றார்.