ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் முதலமைச்சர்அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரைமுதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

இந்த கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான
84 வயதான அகிமி சகுராய் முதலமைச்சர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;

இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரிக்கும், உறுதுணையாக இருக்கும் தூதரக அதிகாரிகள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழமையையும், கீழடியும், பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.

பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் – அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் ‘நான் முதல்வன் திட்டம்’ – பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என, குழந்தைகள் – மாணவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயலாற்றி வருகிறது. எங்களின் இந்த திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

In Japan Stalin participation in the cultural meeting of the people of India

இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம். நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில் – செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும்.

ஜப்பான் – இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ‘மீண்டும் ஜப்பான் – துடிப்பான இந்தியா – புதிய பார்வைகள் – புதிய பரிமாற்றங்கள்’ என்று அதற்கு தலைப்பு தரப்பட்டு இரண்டு நாட்டிலும் கலாச்சார விழாக்கள் நடைபெற்றன. இத்தகைய கலாச்சார தொடர்புகள் தொடர வேண்டும்.

ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் திரு.நிக்கிலேஷ் கிரி அவர்களும் சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997-ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008-ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் என்று அன்போடுக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.