சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் இறந்த சம்பவங்கள், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது குறித்த புகார்கள் உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், உள்துறைச் செயலர் பெ.அமுதா, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் ச.விசாகன் மற்றும் டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் பகல் 12மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும்.இதில் விதிமீறல்கள் இருக்கக்கூடாது. கடைகளில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். இதில் மாவட்ட மேலாளர்கள் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்களின் விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாகத் தெரியும்படி, கடையின் முன்புறம் வைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் ஆகியோர், தங்களது மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு மதுக்கூடங்கள் செயல்பட்டால், மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதைக் கண்டறியவும் மதுபானக் கடைகளைத் தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களைக் கண்டறிந்து, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், மேலும், கூடுதல் விலைக்கு விற்ற பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் அடிப்படையில், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கவும், அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதற்கான அறிக்கை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.