சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது மற்றும்கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாததுதான் இதற்கு காரணம் என தெரிகிறது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் அறிவிக்கை அனுப்பியதை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தது. இருப்பினும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி ஆகிய இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு
அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசின் அலட்சியப் போக்கால் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு போன்ற சிறிய காரணங்களுக்காக, இந்த மூன்று மருத்துவ கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் இளங்கலை மருத்துவ இடங்களை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இது வேதனைக்குரியது மட்டுமல்ல தமிழகத்திற்கே இது ஒரு பெரும் தலைகுனிவு என்றும் எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார்.
மேலும் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தபோது பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சி கொண்டிருந்தனர் என்றும் தற்போது இந்த திமுக அரசு அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போட்டிருப்பதை மிகுந்த வேதனையுடன் கண்டிப்பதாகவும் கூறியிருக்கிறார். உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு மீண்டும் இந்த மூன்று கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.