புதுடெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான அடிக்கல்லை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி நாட்டியது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணி டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு சாதனை கால அளவில் முடிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார். விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக, நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. இந்த செங்கோல், மக்களவை சபாநாயகரின் இருக்கையின் மேல் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட 19 ஆதீனகர்த்தர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுடன் பாரம்பரிய இசைக் கலைஞர்களும் சென்றுள்ளனர்.
புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது. நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.