புதுடெல்லி: நினைத்ததை செய்து முடிப்பதற்கு ஒருவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதிகார உணர்வு இருந்தால் கூட போதுமானது. இந்த எண்ணமே அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தங்களை உயர்குடிகளைச் சேர்ந்தவர்களாக எண்ணச் செய்கிறது.
இதற்கு சமீபத்திய சாட்சி, செல்பி எடுக்கும்போது நீர்த்தேக்கம் ஒன்றில் தவறி விழுந்த தனது செல்போனுக்காக அந்த நீர்த்தேக்கத்தில் இருந்த லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அவலச் சம்பவம்.
அரசு அதிகாரிகளிடம் இந்த அலட்சிய போக்கு நிகழ்வது இது முதல்முறை இல்லை. ஐஏஎஸ் அதிகாரிகளின் நாய் விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி செய்யவேண்டும் என்பதற்காக, பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது, தொலைந்துபோன பலாப்பழம், எருமை மாடுகளைக் கண்டுபிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்ட சம்பவங்கள் முன்பு அரங்கேறியிருக்கின்றன. அந்த வரிசையில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
நீர்த்தேக்க நீர் வெளியேற்றம்: சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருந்த ராஜேஷ் விஸ்வாஸ், கடந்த திங்கட்கிழமை விடுமுறைக்காக அங்குள்ள கெர்கட்டா – பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது விலையுயர்ந்த செல்போன் நீர்த்தேக்கத்தில் 15 அடி ஆழத்தில் விழுந்தது. விஸ்வாஸ் தனது செல்போனை தேடுமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மோட்டார் பம்ப் கொண்டு வரப்பட்டு, நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை காலையில் அவரது செல்போன் மீட்கப்பட்டுள்ளது.
பலாப்பழத்தைத் தேடிய போலீஸ் தனிப்படை: கடந்த 2014-ம் ஆண்டு, அப்போதைய ஜக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. மகேந்திர பிரசாத்தின் அரசு பங்களாவில் இருந்து இரண்டு பலாப் பழங்கள் திருடு போய்விட்டதாக டெல்லி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தாமதமின்றி டெல்லி போலீஸ் விசாரணையில் இறங்கியது. இந்தத் திருட்டு குறித்து எம்பியின் தனி அலுவலர் (பிஏ) புகார் கொடுத்ததைத் தொடர்ந்து குற்றச் சம்பவத்தை விசாரிக்க தனிப்படை ஒன்றை டெல்லி போலீஸ் அமைத்தது. அதில் ஒருவர் போலீஸ் துறையின் கைரேகை மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி.
முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர், பலாப்பழங்களை குழந்தைகள் சிலர் விளையாட்டாக திருடியிருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். பலாப்பழத் திருடர்களை போலீஸார் தேடிய இந்த சம்பவத்தை தழுவி இந்திப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அமைச்சர் வீட்டில் திருடுபோன எருமைகள்: அதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசில் அமைச்சராக இருந்தவர் ஆசாம் கான். இவர் தனது பண்ணையில் 7 எருமை மாடுகள் திருடுபோய் விட்டதாக ராம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அமைச்சரின் புகாரினைத் தொடர்ந்து, அப்போதைய எஸ்.பி. சாத்னா கோஸ்வாமி தலைமையில் போலீஸ் படை எருமை மாடுகளைத் தேடித் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. தங்களது கடமையில் இருந்து தவறியதாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராம்பூர் போலீஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆசாம் கான் வீட்டின் அருகில் உள்ள இறைச்சிக் கடைகளின் சிசிடிவி காட்சிகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டன.
இறுதியில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்படியாக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீஸார் எருமை மாடுகளை மீட்டனர்.
நாய்களுக்காக வீரர்கள் வெளியேற்றம்: டெல்லியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தடகள வீரர்கள் தங்களின் மாலை நேர பயிற்சியை சீக்கிரம் முடித்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதாக கடந்த ஆண்டு புகார் தெரிவித்தனர். இதற்கு காரணம் ஒரு ஐஏஎஸ் தம்பதி மைதானத்தில் தங்களின் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்ல விரும்பியதே.
கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம், டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் மாலையில் எடுத்துக்கொள்ளும் தங்களின் பயிற்சியின் நேரத்தை குறைத்துக் கொள்ளும் படி ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தெரிவித்ததாக தடகள வீரர்கள் புகார் தெரிவித்தனர். கிர்வார் அப்போது டெல்லி அரசின் தலைமைச் செயலராக (வருவாய்) இருந்தார். அவரும் அவரது மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா மைதானத்திற்குள் நாயுடன் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகின.
இருந்தபோதிலும் கிர்வார் தடகள வீரர்களின் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்தார். மேலும் பயிற்சி நேரம் முடியும் தருவாயில் தான் மைதானத்திற்கு தான் செல்வதாக அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து மைதானங்களின் பயிற்சி நேரத்தை இரவு 10 மணி வரை நீடித்து அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டார். பின்னர் சஞ்சீவ் கிர்வாரும் அவரது மனைவி ரிங்கு துக்காவும் முறையே லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டனர்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோக செயல்களுக்கு இவை சில உதாரணங்களே. இன்னும் ஏதுவும் நடக்கலாம்.