செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரத்தில் பாஜக தனது கருத்தை பதிவு செய்துள்ளது.
மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச் சோதனை நடைபெற்றது. கரூரில் அமைச்சரின் சகோதரர் வீட்டிற்க்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம் ஐடி கார்ட் இருக்கா, கையில் கொண்டு செல்லும் பையில் என்ன உள்ளது என கேட்டு அமைச்சரின் ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதிகளில் களேபரம் ஏற்பட்டது. அதேபோல் அதிகாரிகளுடன்
வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளின் காரை சேதப்படுத்தும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. அதையடுத்து திமுக மீது பாஜக கடுமையான கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை கரூர் சம்பவம் உணர்த்தியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அதேபோல் கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவுதளத்தை குறைக்க அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும், அதிமுகவின் கோட்டையில் திமுகவின் கொடி உயர பறக்க காரணமாக இருந்த செந்தில்பாலாஜியை முடக்க இத்தகைய ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் திமுக உடன் பிறப்புகள் கொந்தளித்தனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கரூரில் இரு வருமான வரி துறை அதிகாரிகள் மற்றும் செந்தில் பாலாஜி விசுவாசிகள் இரு தரப்பினரின் மீதும் வழக்கு தொடுத்திருப்பதாக சொல்லப்படுவது வியப்பையளிக்கிறது. மேலும், முன்னரே தகவல் சொல்லாது சென்றால் இப்படி தான் நாடக்கும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பது கேலிக்கூத்து.
சோதனைக்கு செல்லும் வருமானவரி துறை அதிகாரிகளுக்கே, வாகனங்களில் ஏறும் போது தான் எங்கு சோதனையிட போகிறார்கள் என்று தெரியும். அப்படியிருக்கையில் காவல்துறைக்கு எங்கு சோதனை நடக்கப்போகிறது என்ற தகவலை முன்னரே சொல்ல வேண்டும் என பொது அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.
மேலும், வருமான வரி துறையினர் எங்கு வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் சோதனையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்பதை சட்டம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் அதற்கான விளைவுகளுக்கு தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது வரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தன போக்கை, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது.
மத்திய அரசின் ஊழியர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்’’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.