புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் ஆக்கியிருப்பதாக பெருமை பேசும் பாஜக, அதே குடியரசுத் தலைவரை கொண்டு நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைக்கக் கூடாதா என்பதே எதிர்க்கட்சிகளின் கேள்வி. ஆனால் பிரதமர் மோடிதான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்கப் போகிறார் என்ற பாஜகவின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோழர் காலத்து வழக்கமான செங்கோலை, ஆதீனங்களிடம் இருந்து பெற்று நாடாளுமன்றத்தில் வைப்பது தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய நிகழ்வு என பாஜகவினர் கூறுகின்றனர். “இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்டபோது, அதன் நினைவாக அப்போதும் செங்கோலை ஆதீனங்கள் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். அதேபோன்ற நடைமுறையைத்தான் இப்போதும் பின்பற்றுகிறோம்” என்கின்றனர் பாஜகவினர்.
`செங்கோல் கொடுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கான அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது கட்டுக்கதை’ என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த செங்கோல் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை, இல கணேசன் ஆகியோரை வைத்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமும் அளிக்கப்பட்டது. அப்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் உடனிருந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்துள்ளார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபுவிடம் நிர்மலா சீதாராமன், `நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. அதிலும் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சோழர் காலத்து வழக்கமான செங்கோலை வைப்பது தமிழர்களுக்கு பெருமை தரும் நிகழ்வு. அதை திமுக புறக்கணிக்கக்கூடாது. கட்டாயம் பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. `செங்கோல் வைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டுமென்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’ என்று சேகர் பாபு அப்போதே தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எந்த கூட்டணியிலும் இல்லாத பாமக பங்கேற்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல காங்கிரஸ் அணியில் இல்லாத சில கட்சிகள் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. ஆனால் கூட்டறிக்கை விட்ட எந்த கட்சிகளும் திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்பதில் உறுதியாகவே உள்ளன.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம். “நாடாளுமன்றக் கட்டத்தை திறந்துவைக்கும் அனைத்து உரிமைகளும் தகுதியும் உடையவர் குடியரசுத் தலைவர். ஆனால் அழைப்பிதழில் கூட அவர் பெயரைக் குறிப்பிடாமல் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவர், இந்தியாவின் முதல் குடிமகனாக இருக்கிற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வைத்து நாடாளுமன்றத்தை திறக்கக்கூடாது என்பது வர்ணாஸ்ரம தர்ம கோட்பாடு. ஆர்.எஸ்.எஸ் சொற்படி இந்த ஆட்சிக்கு நடக்கிறது என்பதற்கான சாட்சிதான் திரெளபதி முர்முவை புறக்கணிப்பது.
அதுமட்டுமின்றி எந்த நாளில் நாடாளுமன்றத்தை திறக்கிறார்கள்? மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கர், பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், `சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்’ என மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறப்பது சுதந்தரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கொச்சைப்படுத்தும் செயல். அதேபோல சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைப்பது என்பது சனாதன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் செயல். மன்னர்கள் காலத்தில் ராஜகுருக்கள்தான் செங்கோலை கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ சித்தாந்தத்தைப் புகுத்துகிற ஆட்சி பாஜகவின் ஆட்சி. திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க மாட்டோம்” என்றார்.