புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுவதை நினைவுகூரும் வகையில் சிறப்பு ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த சிறப்பு நினைவு நாணயம் இந்தியாவின் 75-வது சுதந்திரதின ஆண்டு கொண்டாட்டத்திற்கான அர்ப்பணிப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பு நினைவு நாணயம், 44 மில்லிமீட்டர் விட்டமும், விளிம்பில் 200 தொடர் வரிசைகளைக் கொண்டதாக இருக்கும். அதேபோல் இந்நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகிய உலோகக் கலவைக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகத் தூணில் உள்ள சிங்க முகங்களும் அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். நாணயத்தின் இடதுபக்கத்தில் பாரதம் என்று தேவநகரி எழுத்திலும், வலதுபக்கதில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
அதே நேரத்தில் நாணயத்தின் மறுபக்கம் நாடாளுமன்ற வளாகம் காட்டப்பட்டிருக்கும் அதன் மேலே சன்சத் சங்குல் என்று தேவநகரி எழுத்திலும், கீழே நாடாளுமன்ற வாளாகம் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் வடிவமைப்பு இந்திய அரசியல் அமைப்பின் முதலாவது ஷரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களின் படி இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியால் திறக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், இந்த விழாவில் “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். சர்வாதிகாரப் போக்கு. நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை” என்று தெரிவித்து 20 எதிர்க்கட்சிகளும் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்கப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு கடும் எதிப்புத் தெரிவித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ,”எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நமது ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலைமைப்பு மதிப்புகளுக்கான அப்பட்டமான அவமதிப்பு” என்று தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.