புதுடெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் ஜெயா சுகின் வாதிடுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் 79-வது பிரிவின் கீழ், நாட்டின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவுக்கு அவரை அழைத்திருக்க வேண்டும். அவரைஅழைக்காதது, குடியரசுத் தலைவரை அவமதிப்பு செய்வது போன்றது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கவில்லை என்றால், மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிடுகையில், ‘‘இந்த மனுவை திரும்பப் பெற அனுமதித்தால், அது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த மனு ஏன், எப்படி தாக்கல் செய்யப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. அரசியல் சாசனத்தின் 32-வது சட்டப்பிரிவின் படி இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த மனு திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றனர்.
75 ரூபாய் சிறப்பு நாணயம்: மத்திய நிதியமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதை முன்னிட்டு 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட இருக்கிறது.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகத் தூணில் உள்ள சிங்க முகங்களும் அதன் கீழ்ப்பகுதியில் சத்யமேவ ஜெயதே என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். மறுபக்கம் நாடாளுமன்ற கட்டிடம் இடம்பெறும். அதன் மேற்பகுதியில் சன்சத் சங்குல் என்று தேவநாகரி எழுத்திலும், கீழே நாடாளுமன்ற வளாகம் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் வடிவமைப்பு இந்தியஅரசியல் அமைப்பின் முதலாவதுஷரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.