புதுச்சேரி: “அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் அனுமதி பெற அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்தக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் கல்லூரி அங்கீகாரம் ரத்துக்கான காரணங்களை கேட்டறிந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி அதிகாரிகளை ஆளுநர் கடுமையாக கடிந்து கொண்டார்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வறுமை கேட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் உயர்கல்வி கூட சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட அடிப்படை வசதிகள் அதிகமாக நமது கல்லூரியில் இருக்கிறது. இதில் மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இந்திய மருத்துவ ஆணைய அதிகாரிகள் இங்கு வந்து பார்க்கும்போது எல்லா விதத்திலும் மருத்துவக் கல்லூரி சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்காக நமக்கு என்னென்ன உயர்கல்விக்காக அங்கீகாரம் கிடைத்ததோ அந்த அங்கீகாரம் எல்லாம் கிடைத்துவிட்டது.
இது மற்ற இடங்களில் இலகுவாக கிடைக்காது. ஆனால் வறுகை பதிவேடு, மருத்துவக் கல்லூரி நடவடிக்கைகள் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படாதது ஆகிய இரண்டு சிறிய ஏற்பாடுகளில் அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள். இது கண்டிக்கக்கூடியது. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, சிறிய இணைப்பு (கனெக்ஷன்) பிரச்சினையை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆணையம் இப்போது மிகுந்த கண்டிப்புடன் இருக்கின்றது. வருங்கால மாணவர்கள் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் அவ்வளவு கண்டிப்புடன் இருக்கின்றனர். இங்கு அறுவை சிகிச்சை கூடங்கள், அறுவை சிகிச்சைகள் சரியில்லை என்பதெல்லாம் இல்லை. எல்லா அடிப்படை வதிகளும் நம்மிடம் இருக்கிறது. கட்டாயம் சிசிவிடி கேமராவில் பார்க்க வேண்டும். வறுகைப் பதிவேடு கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், மருத்துவர்களுக்கும் வருகை பதிவை முறைப்படுத்த வேண்டும் என்று கண்டிப்போடு சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் மாணவர்கள், பெற்றோர் யாரும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் மருத்துவக் கல்லூரி அங்கீகார ரத்தை சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கல்லூரியின் குறைபாடுகளுக்கு அதிகாரிகளே காரணம். இவற்றை முறைப்படுத்தி இருக்க வேண்டும். நானே இதனை பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன். இது மிகமிக கவலை அளிக்கக்கூடியது. இதற்காக நான் கோபம் அடைந்தேன். இதுவே கடைசியாக இருக்க வேண்டும், இனி இதுபோல் நடக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.
மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விலையாடக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகளில், கல்வி கற்றுக்கொடுப்பதில் பிரச்சனை இல்லை. நோயாளிகளை பார்ப்பதிலும் பிரச்சனை இல்லை. இதுதான் மருத்துவக்கல்லூரிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் பல மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடுகள் நடக்கிறது என்பதற்காக இந்திய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரிகளை கண்காணிக்க வேண்டும் என சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
மாணவர் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. யூனியன் பிரதேசங்களிலேயே புதுச்சேரியில் தான் அரசு மருத்துவக் கல்லூரியை நடத்துகிறோம். எனவே புதுச்சேரிக்கான பெருமை சீர்குலைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்” என்றார்.